கன்னிப்பூ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது எப்போது? அதிகாரிகள்-விவசாயிகள் பங்கேற்ற கூட்டத்தில் ஆலோசனை


கன்னிப்பூ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது எப்போது? அதிகாரிகள்-விவசாயிகள் பங்கேற்ற கூட்டத்தில் ஆலோசனை
x
தினத்தந்தி 3 May 2018 10:30 PM GMT (Updated: 3 May 2018 9:17 PM GMT)

குமரி மாவட்ட அணைகளில் இருந்து கன்னிப்பூ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது எப்போது? என்பது குறித்து அதிகாரிகள்-விவசாயிகள் பங்கேற்ற கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ ஆகிய இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2, பொய்கை, மாம்பழத்துறையாறு ஆகிய அணைகள் ஜீவநாடியாக இருந்து வருகிறது. அணைகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படுவது ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நடைமுறையாகும். ஜூன் மாதம் அணைகள் திறக்கப்படுவதால் கன்னிப்பூ சாகுபடி பணியை விவசாயிகள் மே மாதத்தில் தொடங்கி விடுவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு பேச்சிப்பாறை அணையை பலப்படுத்தும் பணியும், மேம்பாட்டு பணிகளும் நடைபெறுவதால் அணையில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. 48 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் நேற்றைய நிலவரப்படி 1.70 அடி நீர்மட்டம் மட்டுமே இருந்தது.

எனவே இந்த ஆண்டு கன்னிப்பூ சாகுபடி நடைபெறுமா? சாகுபடி செய்தால் தண்ணீர் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. அது கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் எதிரொலித்தது. அப்போது இதுதொடர்பாக ஒரு வாரத்தில் விவசாயிகளும், அதிகாரிகளும் கலந்துபேசி முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவின்பேரில், குமரி மாவட்ட அணைகளில் இருந்து கன்னிப்பூ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது எப்போது? என்பது குறித்து அதிகாரிகள்-விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக லூயி பிரெயிலி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணபாலன் தலைமை தாங்கினார். மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ முன்னிலை வகித்தார். அதிகாரிகள் தரப்பில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதார அமைப்பு) வேத அருள்சேகர், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் தெய்வநாயகம், பேச்சிப்பாறை அணை உதவி செயற்பொறியாளர் மோகன்தாஸ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அசோக்மேக்ரின் ஆகியோரும், விவசாய சங்கங்களின் சார்பில் பத்மதாஸ், புலவர் செல்லப்பா, மருங்கூர் செல்லப்பா, செண்பகசேகரபிள்ளை, விஜி, முருகேசபிள்ளை, சண்முகம்பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

பேச்சிப்பாறை அணை உள்பட அனைத்து அணைகளிலும் குறைந்தபட்சம் 1500 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தால் அணைகளை திறக்கலாம். ஆனால் தற்போது பேச்சிப்பாறை அணையை தவிர்த்து மற்ற அணைகளில் 1750 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. இந்த தண்ணீரை வைத்து நெல் விவசாயத்துக்கு 40 நாட்கள் தண்ணீர் கொடுக்கலாம். ஆனால் நெல்லுக்கு 100 நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டும்.

மழை பெய்யாவிட்டாலும் தற்போது பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 100 கன அடிவீதம் வந்து கொண்டிருக்கும் தண்ணீர் அனைத்து கால்வாய்களிலும் சென்று கொண்டிருக்கிறது. வருகிற 6-ந் தேதி முதல் கன்னிப்பூ சாகுபடிக்கு வசதியாக பேச்சிப்பாறை அணைக்கு வரும் தண்ணீர் நாஞ்சில் புத்தனார் கால்வாயில் மட்டும் திறந்துவிட்டு, குளங்கள் அனைத்தையும் பெருக்குவது. வருகிற ஜூன் மாதம் மழை பெய்யும்போது பேச்சிப்பாறை அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அனைத்து கால்வாய்களிலும் திறந்து விடப்படும். அதேநேரத்தில் பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2 அணைகளுக்கு வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.

ஜூன் மாதத்தில் அணை திறக்கப்படும்போது பட்டணங்கால், இரணியல் கால்வாய், பத்மநாபபுரம் புத்தனார் கால்வாய் ஆகியவற்றில் நெல் விவசாய பரப்பு குறைவு என்பதால் இந்த கால்வாய்களில் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிடப்படும். மற்ற கால்வாய்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தண்ணீர் திறந்துவிடப்படும். தண்ணீர் திறக்கப்படும் தேதி அரசு உத்தரவுப்படி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் பாசன வாய்க்கால்கள் அனைத்திலும் தூர்வாரும் பணி வருகிற 15-ந் தேதி தொடங்கி, 30-ந் தேதி முடிக்கப்படும்.

அனைத்து கால்வாய்களின் கடைவரம்பு பகுதிகளிலும் மாற்று பயிர்களான மரவள்ளி, கடலை, உளுந்து போன்றவற்றை விவசாயிகள் பயிரிடுவது நல்லது. வருகிற 15-ந் தேதிக்கு மழை இருந்தால் மட்டும் விவசாயிகள் பொடி விதைப்பை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

Next Story