குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 May 2018 4:30 AM IST (Updated: 4 May 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தோகைமலை,

தோகைமலை அருகே உள்ள வடசேரி ஊராட்சி காவல்காரன்பட்டி பாரதி நகரில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதன் அருகே ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த ஆழ்குழாயில் அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் இரு சக்கர வாகனத்திலும், நடந்தும் பல இடங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்ததால் குறித்த நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர்.

சாலை மறியல்

இந்நிலையில் நேற்று குடிநீர் பற்றாக்குறையை போக்க வலியுறுத்தி தோகைமலை- திருச்சி சாலையில் காவல்காரன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற செயலாளர் கலியராஜா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக பழுதான மின் மோட்டாரை சரி செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் தோகைமலை- திருச்சி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story