விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் தி.மு.க. நகர துணை செயலாளர் கைது


விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் தி.மு.க. நகர துணை செயலாளர் கைது
x
தினத்தந்தி 4 May 2018 3:56 AM IST (Updated: 4 May 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் தி.மு.க. நகர துணை செயலாளரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் அவரது மகன்கள் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அண்ணா நகரை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 22). இவர், சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க.வில் இருந்து விலகி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (37). இவர், தி.மு.க. வார்டு செயலாளராக உள்ளார். அத்துடன் அதே பகுதியில் மாட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் அரவிந்தன் வேலை செய்து வந்தார். சதீஷ்குமாரின் அண்ணன் அன்பு (47) தி.மு.க. நகர துணை செயலாளராக உள்ளார்.

அரவிந்தனுக்கும், சதீஷ்குமாருக்கும் கட்சி தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி நடிகர் அஜித் பிறந்த நாளையொட்டி அரவிந்தன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார். அப்போது ஏற்பட்ட தகராறில் சதீஷ்குமார் கத்தியால் அரவிந்தனை குத்தியதாக தெரிகிறது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இதில் தொடர்புடைய அவரது அண்ணன் அன்புவை நேற்று கைது செய்தனர். பின்னர் அண்ணன் - தம்பி இருவரையும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான சதீஷ்குமார் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

அரவிந்தன், என்னுடன் தி.மு.க.வில் இருந்தார். கட்சி பணிகளை செய்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து அண்ணா நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் நட்டு, பெயர் பலகை திறந்தார். அதனை அகற்றும்படி கூறினேன். இதனால் எங்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.

நானும் அஜித் ரசிகர் தான். என்னை அழைக்காமல் அஜித்தின் பிறந்த நாளை அரவிந்தன் கொண்டாடினார். அப்போது ஏன் தேவையில்லாத வேலை செய்கிறாய் என கேட்ட எனது அண்ணன் அன்புவை அரவிந்தன் எதிர்த்து பேசினார். மேலும் வாக்குவாதத்தில் அரவிந்தன் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அன்பு, அவனை (அரவிந்தன்) கொல்லுங்கள் என கூறியதால், நான் மாடு வெட்டும் கத்தியால் அவன் மார்பில் குத்தினேன். அதில் அரவிந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக அன்புவின் மகன்கள் தீபன்ராஜ், சரண்ராஜ், அருண்ராஜ், செல்வராஜ் ஆகிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story