கர்நாடகத்தில் ‘ஜிகாதி’ மனநிலையில் செயல்படும் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும் யோகி ஆதித்யநாத் பேச்சு


கர்நாடகத்தில் ‘ஜிகாதி’ மனநிலையில் செயல்படும் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும் யோகி ஆதித்யநாத் பேச்சு
x
தினத்தந்தி 4 May 2018 5:32 AM IST (Updated: 4 May 2018 5:32 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ‘ஜிகாதி‘ மனநிலையில் செயல்பட்டு வரும் காங்கிரஸ் ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும் என் உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பேசினார்.

பெங்களூரு,

கார்வார் மாவட்டம் சிர்சியில் நேற்று பா.ஜனதா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. மேலும் மாநிலத்தில் ஜிகாதி மனநிலையில் காங்கிரஸ் ஆட்சி செயல்பட்டு வருகிறது. மேலும் மக்களை பிரித்தாளும் கொள்கையை இந்த அரசு கடைப்பிடித்து வருகிறது.

கர்நாடகத்தில் இந்து அமைப்பை சேர்ந்த 23 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுவே காங்கிரஸ் அரசு ஜிகாதி மனநிலையில் இருப்பதற்கான ஆதாரம். மதத்தின் பெயரால் மக்களை பிரிவினைப்படுத்தும் செயல்களில் கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. பிரித்தாளும் கொள்கை மூலம் பயங்கரவாதத்திற்கு இந்த அரசு துணைபோகிறது.

இத்தகைய செயல்களை கர்நாடகத்தில் தடுத்து நிறுத்தவே நான் இந்த தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள வந்துள்ளேன். காங்கிரஸ் அரசு, விவசாயிகள், சாதாரண மக்கள், வர்த்தகர்கள் மற்றும் பா.ஜனதாவினருக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. சித்தராமையா ஆட்சியில் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. இந்த அரசு அராஜகத்திற்கு உறுதுணையாக உள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்தது பற்றி முதல்-மந்திரி சித்தராமையா அவதூறான கருத்தை தெரிவித்துள்ளார். இது அவரது அலட்சியத்தை காட்டுகிறது.

கர்நாடகத்தை, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, தானியங்கி எந்திரமாக பயன்படுத்தி வருகிறது. காங்கிரஸ் இல்லாத கர்நாடகத்தை உருவாக்கவே நான் இங்கே வந்துள்ளேன். ‘ஜிகாதி’ மனநிலையில் செயல்படும் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற கர்நாடக மக்கள் தயாராக வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. ராமர் வனவாசம் சென்றிருந்த போது, தென்னிந்தியாவில் தான் விசுவாசமிக்க பக்தரான ஆஞ்சநேயரை கண்டார். தென்மாநிலங்களில் ராமராஜ்ஜியம் பரவ ஆஞ்சநேயர் ஒரு கருவியாக இருந்தார். இந்தியா ஒருங்கிணைந்த நாடு. ஒரே இந்தியா, சிறந்த இந்தியா என்று நாம் அனைவரும் நம்ப வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 
1 More update

Next Story