‘அக்னி’ வெயில் தொடக்கத்தில் ஆறுதல் அளித்த கோடை மழை


‘அக்னி’ வெயில் தொடக்கத்தில் ஆறுதல் அளித்த கோடை மழை
x
தினத்தந்தி 4 May 2018 10:45 PM GMT (Updated: 4 May 2018 10:42 PM GMT)

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ‘அக்னி’ வெயில் தொடக்கத்தில் கோடை மழை பெய்து ஆறுதல் அளித்தது.

திருச்சி, 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிலர் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. வேறுவழியின்றி தொழில் மற்றும் பிழைப்புக்காக வெயிலில் கஷ்டப்படுபவர்களின் நிலைமை சிரமமானதுதான்.

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் இளநீர், நுங்கு, மோர், பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்களை அருந்தி உடல் சூட்டை தணித்து ஆசுவாசப்படுத்தி வருகிறார்கள். அதிலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனல் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சருமம் வறண்டதோடு மட்டுமின்றி உடலில் இருந்து வியர்வை அதிக அளவில் வெளியேறி வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக பெண்கள் சரும பிரச்சினையில் இருந்து தப்பிக்க இருசக்கர வாகனத்தில் செல்லும்போது உடல் மற்றும் முகத்தை முழுமையாக துணியால் மூடிக்கொண்டு செல்கிறார்கள். மேலும் நடந்து செல்லும் பெண்கள் துப்பட்டாவால் தலையை போர்த்தியபடியும், சிலர் குடைபிடித்த படியும் சென்றதை காணமுடிந்தது.

தமிழகத்தின் மத்திய மாவட்டங்களான திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் வேலூர், திருத்தணி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் உச்சம் 100 டிகிரியில் தொடங்கி 105 டிகிரியை தாண்டி விட்டது. அதிக பட்சமாக கரூரில் 106 டிகிரிவரை வெயில் கொளுத்தியது. திருச்சியில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் 106 டிகிரிவரை பதிவானது. இந்த நிலையில் ‘கத்தரி வெயில்’ என்னும் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் நேற்று முதல் தொடங்கியது. வருகிற 28-ந் தேதி இது நீடிக்கும்.

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அக்னி வெயில் தொடங்கிய முதல் நாளிலேயே ஆறுதல் அளிக்கும் வகையில் அதிகாலை வேளையில் மழை பெய்தது. மணப்பாறை, பொன்னணியாறு அணை, மருங்காபுரி, கோவில்பட்டி, துவாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவு நல்ல மழை பெய்தது. திருச்சி மாநகரில் சாலை நனையும் அளவுக்கே லேசான மழை பெய்து, வெப்பத்தை சிறிது தணித்தது. இதனால், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக நேற்று 100 டிகிரிக்கும் கீழேதான் திருச்சியில் வெயில் அளவு பதிவானது. அதாவது மாலை 5 மணி நிலவரப்படி 96.8 டிகிரியே பதிவாகி இருந்தது. இது சாதாரண நாட்களில் இருக்கும் வழக்கமான பதிவே.

திருச்சி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
துவாக்குடி-48, பொன்னணியாறு அணை-38, மணப்பாறை-27.60, மருங்காபுரி-25.40, கோவில்பட்டி-18.20, திருச்சி ஜங்சன்-0.20, திருச்சி விமான நிலையம்-0.20.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாவே வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருவதுடன் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்ல முடியாத அளவில் வீடுகளுக்குள் முடங்கி இருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை குளிர்ந்த காற்று வீசியது. சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது. தூறலுடன் தொடங்கிய மழை நேரம் ஆக, ஆக அதிகரிக்க தொடங்கியது. 30 நிமிடத்திற்கும் மேலாக நீடித்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பத்தின் தாக்கத்தை குறைத்த இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story