சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் விரைவான நடவடிக்கை தேவை - சூப்பிரண்டு ஸ்ரீநாத்


சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் விரைவான நடவடிக்கை தேவை - சூப்பிரண்டு ஸ்ரீநாத்
x
தினத்தந்தி 5 May 2018 5:44 AM IST (Updated: 5 May 2018 5:44 AM IST)
t-max-icont-min-icon

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் விரைவான நடவடிக்கை தேவை என்று போலீசார்-டாக்டர்கள் பங்கேற்ற கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் வேண்டுகோள் விடுத்தார்.

நாகர்கோவில்,

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் டாக்டர்களும், போலீசாரும் விரைவாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது “பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு விரைவாக சிகிச்சை மேற்கொண்டு, அதுதொடர்பான மருத்துவ பரிசோதனை அறிக்கையை போலீசாருக்கு விரைந்து கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால்தான் போலீசார், பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு எதிராக குற்றம் இழைத்தவர்களுக்கு விரைவாக தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க முடியும்“ என்றார்.

மேலும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் விவரங்கள், சட்டம் சார்ந்த மருத்துவம் ஆகியவை குறித்து எடுத்துக்கூறப்பட்டது. மேலும் படக்காட்சிகளுடன் விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் உதவி சூப்பிரண்டுகள் ஸ்ரீஅபினவ் (தக்கலை), சாய்சரண் தேஜஸ்வி (குளச்சல்), துணை சூப்பிரண்டு வேணுகோபால் (கன்னியாகுமரி) மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள 4 அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் சோமசேகர், துணை முதல்வர் லியோடேவிட், உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன், உதவி உறைவிட மருத்துவ அதிகாரி கலைக்குமார், அவசரகால சிகிச்சைப்பிரிவு டாக்டர்கள், மகப்பேறு மருத்துவத்துறை, குழந்தைகள் நல சிகிச்சைப்பிரிவுத்துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story