விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு
வணிகர் தினத்தையொட்டி நேற்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.
விழுப்புரம்
ஆண்டுதோறும் மே மாதம் 5-ந் தேதி வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி வணிகர் தினத்தையொட்டி நேற்று விழுப்புரம் நகரில் மளிகை கடைகள், துணிக்கடைகள், காய்கறி கடைகள், ஓட்டல்கள், நகை கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் மருந்து கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருந்தன. அதுபோல் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒன்றிரண்டு டீக்கடைகளும் திறந்திருந்தன. பெரும்பாலான வியாபாரிகள் கடைகளை அடைத்திருந்ததால் விழுப்புரம் நகரில் உள்ள சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
குறிப்பாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் விழுப்புரம்- புதுச்சேரி சாலை, திரு.வி.க. சாலை, காமராஜர் வீதி, கே.கே.சாலை, எம்.ஜி.சாலை, சென்னை- திருச்சி நெடுஞ்சாலை மற்றும் மார்க்கெட் வீதிகள் ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டன. வணிகர்தினம் என்பதை அறியாமல் சிலர் மார்க்கெட் மற்றும் கடைகளுக்கு பொருட்கள் வாங்க சென்று ஏமாற்றத்துடன் திரும்பியதையும் பார்க்க முடிந்தது. இதேபோல் திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, மேல்மலையனூர், திருக்கோவிலூர், சங்கராபுரம், சின்னசேலம், வானூர், மரக்காணம் உள்பட மாவட்டம் முழுவதும் வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்திருந்தனர். பின்னர் வியாபாரிகள் அனைவரும் சென்னையில் நடந்த வணிகர் சங்க மாநாட்டில் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story