மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் திடீர் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி + "||" + Outbreak in Perambalur Public happiness

பெரம்பலூரில் திடீர் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

பெரம்பலூரில் திடீர் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
பெரம்பலூரில் நேற்று திடீரென்று மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3 வாரத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. வெயில் 100 டிகிரியை தாண்டி மக்களை வறுத்தெடுத்தது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அக்னி நட்சத்திரம் என்கிற கத்தரி வெயில் தொடங்கியது. அப்போது, வெயில் கடுமையாக சுட்டெரித்தது. இதனை யடுத்து அன்று மாலையில் சிறிது நேரம் மழை பெய்தது.


இதே போல் நேற்றும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் குடை பிடித்தபடியும், பெண்கள் துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டும் சாலையில் சென்றதை காண முடிந்தது. வெயிலினால் ஏற்பட்ட தாகத்தை பொதுமக்கள் இளநீர், மோர், கரும்பு ஜூஸ், பழ ஜூஸ் உள்ளிட்டவைகளை அருந்தி தீர்த்தனர்.

திடீர் மழை

மேலும் சிறுவர்கள் சிலர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் போட்டு வெயிலை சமாளித்தனர். இந்நிலையில் திடீரென்று நேற்று மாலையில் மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனையடுத்து 4.30 மணியளவில் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. இந்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.