காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு


காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 5 May 2018 11:00 PM GMT (Updated: 5 May 2018 9:14 PM GMT)

திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பவனமங்கலம் கிராமத்தின் அருகில் காவிரி ஆற்றில் புதிதாக மணல் குவாரி அமைத்து மணல் எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பவனமங்கலம், விஷ்ணம்பேட்டை, கூத்தூர், ஒன்பத்துவேலி, விட்டலபுரம் , நடுப்படுகை உள்ளிட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் பவனமங்கலம் காவிரி ஆற்றில் மணல் அள்ள லாரிகள் வந்து செல்ல வசதியாக காவிரி ஆற்றில் இருந்து மெயின் ரோட்டுக்கு தற்காலிக சாலை அமைக்கும் பணிகள் எந்திரம் மூலம் நேற்று நடைபெற்றது.

சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்

இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் காவிரி ஆற்றின் கரையில் ஒன்று கூடி சாலை அமைக்கும் பணியை தடுத்து மறியலில் ஈடுபட முடிவு செய்தனர். இதன்படி கிராம மக்கள் சாலை அமைக்கும் இடத்துக்கு சென்று சாலைப்பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்கிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர்களின் கோரிக்கை குறித்து பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் செல்போனில் பேசினார்.

இதைத்தொடர்ந்து சாலை அமைக்கும் பணியை நிறுத்துவது என்றும் பூதலூர் தாலூகா அலுவலகத்தில் மணல் குவாரி பிரச்சினை குறித்து அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை அமைக்கும் பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்திய சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story