நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல் கட்சிகளை தாண்டி மாணவர் சமுதாயம் பொங்கியெழ வேண்டும் - வைகோ பேட்டி


நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல் கட்சிகளை தாண்டி மாணவர் சமுதாயம் பொங்கியெழ வேண்டும் - வைகோ பேட்டி
x
தினத்தந்தி 7 May 2018 4:30 AM IST (Updated: 7 May 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல் கட்சிகளை தாண்டி மாணவர் சமுதாயம் பொங்கியெழ வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று புதுவை வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறப்பாக நிர்வாகம் நடத்தி வருகிறார். ஆனால் கவர்னர் கிரண்பெடி அரசின் அனைத்து திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார். கவர்னர் போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறார். இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

புதுவை மாநிலத்தின் உரிமைகளுக்காக நாராயணசாமி போராடி வருகிறார். இதனை நான் பாராட்டுகிறேன்.

நீட் தேர்வு சமூக நீதியை குழித்தோண்டி புதைக்கும் செயலாகும். ஏழை-எளிய மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் டாக்டர்கள் ஆக வேண்டும் என்ற கனவை சிதைத்து விட்ட னர். ஏழை-எளிய மாணவர்கள் 99 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று டாக்டருக்கு படித்து சிறப்பாக சேவை செய்வார்கள்.

சி.பி.எஸ்.இ. முறைக்கு முக்கியத்துவம் கொடுத்து பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நீட் தேர்வை கொண்டு வந்துள்ளனர். நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்படாமல் ராஜஸ்தான், கேரளா போன்ற பிற மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாணவர்கள் சொந்த நாட்டில் அகதிகள் ஆக்கப்பட்டுள்ளனர்.

இதன் விளைவு கேரளாவுக்கு சென்ற மாணவனின் தந்தை மாரடைப்பில் மரணம் அடைந்துள்ளார். தற்போது தமிழக அரசு அந்த மாணவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதாகவும், அரசு வேலை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. இதனை ஏற்கமுடியாது. அந்த மாணவர் டாக்டராக வேண்டும் என்பதுதான் அவருடைய கனவு.

நீட் தேர்வு காரணமாக ஏராளமான பெற்றோர் மனமுடைந்து உள்ளனர். தேர்வு எழுத சென்ற மாணவிகளை சோதனை என்ற பெயரில் கொடுமைகளை இழைத்துள்ளனர். பிற மாநிலங்களுக்கு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் தங்க இடமில்லாமல் ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் தங்கி உள்ளனர். சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவித்தனர். இதுபோன்ற சூழ்நிலையில் மாணவர்கள் எப்படி தேர்வை எதிர்கொள்வார்கள்.

இதுபோன்ற அநீதி ஆங்கிலேயர்கள் காலத்தில்கூட நடைபெறவில்லை. பிரதமர் மோடி அரசாங்கத்தில் நடைபெறுகிறது. மாணவர் கொந்தளிப்பு அரசியல் கட்சிகளை தாண்டி சீற்றமாக வெளிப்பட வேண்டும். மாணவர் சமுதாயம் பொங்கியெழ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் வெள்ளி விழா ஆண்டு தொடக்க பொதுக்கூட்டம் சுதேசி மில் அருகே நடந்தது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் துணை பொதுச்செயலாளர் மணி, புதுவை பொறுப்புக்குழு தலைவர் கேப்ரியல் மற்றும் கடலூர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கடலூர் மாவட்ட நிர்வாகி ராமலிங்கம் தலைமையில் 250-க்கும் மேற்பட்டோர் ம.தி.மு.க.வில் இணைந்தனர்.

Next Story