தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில், துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம், 10½ பவுன் நகைகள் கொள்ளை


தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில், துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம், 10½ பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 8 May 2018 4:45 AM IST (Updated: 8 May 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் மற்றும் 10½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த அசேஷம் பகுதியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் இந்த வங்கி வழக்கம்போல் இயங்கிக்கொண்டு இருந்தது. அப்போது அந்த வங்கியின் முன்பு ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அந்த காரில் இருந்து 5 மர்ம நபர்கள் இறங்கினர். பின்னர் அவர்கள் அனைவரும் வங்கிக்குள் நுழைந்தனர்.

உள்ளே நுழைந்ததும் அவர்கள் நேராக வங்கிக்குள் சென்று துப்பாக்கி முனையில் வங்கியில் இருந்த ரூ.6 லட்சம் மற்றும் 10½ பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு மின்னல் வேகத்தில் தாங்கள் வந்த காரில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். சுமார் அரை மணி நேரத்தில் இந்த கொள்ளை சம்பவம் நடந்து முடிந்து விட்டது.

இந்த சம்பவம் குறித்து வங்கியின் மேலாளர் கோவிந்தராஜ், மன்னார்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் சம்பவம் நடந்த வங்கிக்கு மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், இன்ஸ்பெக்டர் மணிவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது:-

கொள்ளை நடந்த வங்கிக்கு முதலில் 3 பேர், வாடிக்கையாளர் போல உள்ளே வந்து சுற்றும் முற்றும் பார்த்து விட்டு வெளியே வந்துள்ளனர். பின்னர் சில நிமிட நேரங்கள் கழித்து காரில் வந்த 5 பேரும் வங்கிக்குள், தங்களது முகத்தை கைக்குட்டையால் மூடியபடி உள்ளே நுழைந்துள்ளனர். அவர்கள் ஐந்து பேரும் ஜீன்ஸ் அணிந்து டிப்-டாப்பாக இருந்துள்ளனர்.

அவர்கள், திருநெல்வேலி பகுதியில் பேசும் வழக்குமொழி போல் பேசியுள்ளனர். ஐந்து பேரில் இருவர் கையில் துப்பாக்கியுடனும், ஒருவர் கையில் கத்தியும் வைத்து இருந்து உள்ளனர். துப்பாக்கி முனையில் மேலாளர் கோவிந்தராஜ் மற்றும் காசாளர் தியாகராஜன் ஆகியோரை மிரட்டிய கொள்ளையர்கள், வங்கியின் லாக்கர் சாவியை கேட்டுள்ளனர்.

காசாளர் தியாகராஜனிடம் இருந்த ஒரு சாவியை வாங்கிக்கொண்டு மற்றொரு சாவி எங்கே? என்று கேட்டுள்ளனர். மற்றொரு சாவி வங்கியின் ஊழியர் கோடீஸ்வரன் வைத்திருப்பதாக காசாளர் தியாகராஜன் கூறியுள்ளார். உடனே அவர்கள் கோடீஸ்வரன் எங்கே? என்று கேட்டு உள்ளனர். அவர் சாப்பிட சென்றிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால் அவரது வருகைக்காக கொள்ளையர்கள் காத்து இருந்துள்ளனர்.

வங்கியில் நடந்த சம்பவம் எதுவும் தெரியாமல் சாப்பிட சென்று விட்டு மீண்டும் வங்கிக்கு கோடீஸ்வரன் திரும்பி வந்துள்ளார். அவர் உள்ளே நுழைந்ததும் அவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டி மற்றொரு லாக்கர் சாவியை அவரிடமிருந்து பிடுங்கி லாக்கர் அறையை திறந்து உள்ளே சென்றுள்ளனர்.

பின்னர் நகைகள் இருக்கும் லாக்கரை திறக்க முயன்றுள்ளனர். அவர்களால் லாக்கரை திறக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், தரையில் துப்பாக்கியால் சுட்டு வேறு சாவி இருக்கிறதா? என கேட்டு மீண்டும் மிரட்டியுள்ளனர். வேறு சாவிகள் ஏதும் இல்லையென வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நேரம் ஆகிகொண்டிருந்ததால் காசாளரிடம் இருந்த ரூ.6 லட்சம் மற்றும் அடகு பிடித்து மேஜையில் வைக்கப்பட்டிருந்த 84 கிராம்(10½ பவுன்) நகைகள் ஆகியவற்றை மட்டும் கொள்ளையடித்துக் கொண்டு தாங்கள் வந்த காரில் ஏறி தப்பி சென்றனர். கொள்ளையர்கள் தப்பிச்சென்ற போது வங்கியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் சேமிக்கும் ‘ஹார்டு டிஸ்க்’கையும் கழற்றி எடுத்து சென்றுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி லோகநாதன், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன் ஆகியோர் வங்கிக்கு வந்து வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது மன்னார்குடி செல்லும் சாலையில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ய போலீஸ் அதிகாரிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.

திருவாரூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் ‘ராக்பி’ வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வங்கியில் இருந்து சிறிது தூரம் சென்று விட்டு நின்று விட்டது. மேலும் திருவாரூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், கொள்ளை நடந்த வங்கியில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

வங்கியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் பொதுமக்கள் கொள்ளை நடந்த வங்கிக்கு திரண்டு வந்து பார்வையிட்டனர்.

மன்னார்குடியில், பட்டபகலில் வங்கியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் மன்னார்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story