பிரதமர் மோடி, சோனியா உள்ளிட்ட தலைவர்கள் முற்றுகை கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது
கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் நாளையுடன் (வியாழக்கிழமை) ஓய்கிறது.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் நாளையுடன் (வியாழக்கிழமை) ஓய்கிறது. இதனால் பிரதமர் மோடி, சோனியாகாந்தி உள்ளிட்ட தலைவர்கள் முற்றுகையிட்டு இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
உச்சக்கட்ட பிரசாரம்கர்நாடகத்தில் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியின் பதவி காலம் வருகிற 28–ந் தேதி முடிவடைகிறது. இதையடுத்து கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12–ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் களத்தில் 2,655 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் 222 தொகுதியிலும், பா.ஜனதா சார்பில் 224 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்)–பகுஜன் சமாஜ் சார்பில் 219 தொகுதியிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால், கர்நாடகத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கொளுத்தும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தேசிய கட்சிகளின் தலைவர்கள் கர்நாடகத்தில் நேற்று முற்றுகையிட்டு பிரசாரம் மேற்கொண்டனர். அதாவது பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் முன்னாள் தலைவி சோனியா காந்தி ஆகியோர் கர்நாடகத்தில் நேற்று கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர ஓட்டுவேட்டையில் ஈடுபட்டனர்.
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லைபிரதமர் மோடி, வட கர்நாடகத்தில் விஜயாப்புரா, கொப்பல் மற்றும் பெங்களூரு ஆகிய 3 இடங்களில் நடைபெற்ற கட்சியின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். அவர் பேசுகையில், “காங்கிரஸ் பிரித்தாளும் சூழ்ச்சியை பின்பற்றுகிறது. கர்நாடகத்தில் நடைபெறும் ஊழல் ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும். எடியூரப்பாவை முதல்–மந்திரி ஆக்கினால் கர்நாடகம் வளர்ச்சி பாதையில் செல்லும். மாநிலத்திற்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. சித்தராமையா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை“ என்றார்.
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நேற்று குடகு, தட்சிண கன்னடா ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற கட்சியின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு ஓட்டு வேட்டையாடினார். அதே போல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
சோனியா காந்தி ஆதரவு திரட்டினார்மேலும் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவி சோனியா காந்தி, தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு முதல் முறையாக நேற்று கர்நாடகத்திற்கு வந்தார். அவர் வட கர்நாடகத்தில் உள்ள விஜயாப்புரா மாவட்டம் பபலேஸ்வர் என்ற இடத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
அவர் பேசுகையில், “பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் எந்த பணிகளையும் செய்யவில்லை. நாடு வளர்ச்சி அடையவில்லை. நடிகரை போல் கவர்ச்சிகரமாக நன்றாக பேசுகிறார். இதனால் ஏழை மற்றும் விவசாயிகளின் வயிறு நிரம்பாது. முதல்–மந்திரி சித்தராமையா கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான முறையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்தி இருக்கிறார். நாட்டிலேயே கர்நாடகத்தை அனைத்து துறையின் வளர்ச்சியிலும் முதல் இடத்திற்கு உயர்த்தி இருக்கிறார். அதனால் கர்நாடக மக்கள் மீண்டும் காங்கிரசை ஆதரிக்க வேண்டும்“ என்று கேட்டுக் கொண்டார்.
அதேப் போல் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மைசூருவிலும், அக்கட்சி மாநில தலைவர் எச்.டி.குமாரசாமி மண்டியாவிலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பகிரங்க பிரசாரம் நாளை ஓய்கிறதுமேலும் தேர்தலையொட்டி வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்ட அரசியல் கட்சியினரும் தங்கியிருந்து, தங்களது கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். திரைப்பட நடிகர்–நடிகைகளும் பல்வேறு கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இருப்பினும், வேட்பாளர்கள் ஒலிபெருக்கி, பிரசார வாகனங்கள் பயன்படுத்தாமல் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
வெளியேற உத்தரவுபகிரங்க பிரசாரம் முடிவடைவதால் கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக நட்சத்திர பேச்சாளர்கள், பிரசாரத்தில் ஈடுபடும் வெளியூரை சேர்ந்தவர்கள் நாளை மாலை 6 மணியுடன் தாங்கள் தங்கியுள்ள தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கர்நாடக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், நட்சத்திர பேச்சாளருக்கு கர்நாடகத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் வாக்களிக்க தகுதி இருந்தால் அவர் அங்கு தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும், தேசிய கட்சியின் பொறுப்பாளர் ஒருவர் கர்நாடகத்தில் இருக்கலாம். கட்சி அலுவலகத்துக்கு செல்ல அவருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.