பா.ஜனதா, இந்து அமைப்புக்கு எதிராக பேசுவதால் ‘என்னை கொலை செய்ய சதி நடக்கிறது’ நடிகர் பிரகாஷ்ராஜ் பரபரப்பு பேட்டி
பா.ஜனதா, இந்து அமைப்புக்கு எதிராக பேசுவதால் என்னை கொலை செய்ய சதி நடக்கிறது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பரபரப்பு தகவலை தெரிவித்தார்
மைசூரு,
பா.ஜனதா, இந்து அமைப்புக்கு எதிராக பேசுவதால் என்னை கொலை செய்ய சதி நடக்கிறது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பரபரப்பு தகவலை தெரிவித்தார்.
கொலை செய்ய சதிபிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நான் பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினருக்கு எதிராக பேசி வருவதால், என்னை கொலை செய்ய சதி நடக்கிறது. சில இந்து அமைப்புகள் என்னை கொலை செய்ய திட்டம் தீட்டி வருகிறார்கள். எந்த நேரத்திலும் நான் கொலை செய்யப்படலாம். அதற்கு நான் அஞ்சவில்லை. என்னிடம் இருந்து உயிரை வேண்டுமானால் பறித்துக் கொள்ளலாம். ஆனால் என்னுடைய அறிவு, நடிப்பு திறமையை யாராலும் பறிக்க முடியாது.
மோடிக்கு நாட்டை ஆள தெரியவில்லைதேர்தல் முடியும் வரை அமித்ஷாவுக்கும், யோகி ஆதித்யநாத்துக்கும் கர்நாடகம் தங்கும் விடுதியாக மாறியுள்ளது. இந்த நிலை அவர்களுக்கு வேண்டுமா?. பா.ஜனதா கட்சி மக்கள் நலனில் அக்கறை செலுத்தியிருந்தால், அங்கு தங்க வேண்டிய அவசியம் வேண்டாம். பிரதமர் மோடிக்கு நாட்டை ஆள தெரியவில்லை. நல்லாட்சி நடத்துவதாக கூறிய நரேந்திர மோடி, நாட்டில் குழப்பங்களை உண்டாக்கி உள்ளார். இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் மதவாத கட்சிகளுக்கும், வன்முறையை தூண்டும் கட்சிகளுக்கும் வாக்களிக்காமல், மக்களாட்சி நடத்தும் கட்சிகளை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார்.