ஓமலூர் அருகே இளம்பெண் கொலை: ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் கழுத்தை அறுத்து கொன்றேன்’ கைதான சித்தப்பா பரபரப்பு வாக்குமூலம்
ஓமலூர் அருகே இளம்பெண் கொலை வழக்கில் சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ஆசைக்கு இணங்க மறுத்ததால் கழுத்தை அறுத்து கொன்றதாக கூறி உள்ளார்.
ஓமலூர்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு கூலி தொழிலாளி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவருடைய மனைவியும் இறந்தார். இவர்களுடைய 17 வயது மகள் கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள தந்தை வழி பாட்டி வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் காலை பாட்டி வீட்டில் இருந்த இளம்பெண் கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) அண்ணாமலை, தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இளம்பெண் கொலை தொடர்பாக அவருடைய சித்தப்பாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதில், இளம்பெண்ணை அவர் தான் கொலை செய்தார் என்பது தெரியவந்தது. 45 வயதான அவரை போலீசார் கைது செய்தனர். போலீசில் சித்தப்பா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
எனது அண்ணன் மகளான இளம்பெண் மல்லூரில் அவளுடைய தாய்வழி பாட்டி வீட்டில் வசித்து வந்தாள். அங்கிருந்து கடந்த 3 மாதத்துக்கு முன்பு கஞ்சநாயக்கன்பட்டிக்கு வந்தாள். அங்கு அவள், நான், எனது அம்மா ஆகிய 3 பேரும் குடியிருந்தோம். எனது அப்பா அருகில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வருகிறார்.
நான் எனது அண்ணன் மகள் வீட்டுக்கு வந்தது முதல் அவளை ஆசைக்கு இணங்க வற்புறுத்தி வந்தேன். ஆனால் அவள் எனது ஆசைக்கு இணங்க மறுத்து விட்டாள். இந்தநிலையில் மல்லூரில் உள்ள அவளது தாய்வழி பாட்டிக்கு போன் செய்து என்னை பற்றி கூறினாள். நான் பாலியல் தொல்லை கொடுப்பதாக அப்போது அவரிடம் தெரிவித்தாள். பின்னர் அவளை மல்லூருக்கு அழைத்துச்செல்ல பாட்டியை வரச்சொன்னாள்.
இதனால் கடந்த 9–ந்தேதி மாலை மல்லூரில் இருந்து அவளது பாட்டி, எனது அண்ணன் மகளை அழைத்துச்செல்ல கஞ்சநாயக்கன்பட்டிக்கு வந்தாள். மறுநாள் (10–ந்தேதி) காலை மல்லூரில் இருந்து வந்த அவளது பாட்டியும், எனது அம்மாவும் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டனர்.
அப்போது யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி அண்ணன் மகளை எனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தினேன். ஆனால் அவள் என் ஆசைக்கு இணங்க மறுத்து விட்டாள். எனவே நான் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கொடுவாளை எடுத்து அவளது கழுத்தை அறுத்தேன். இதனால் அவள் அலறியபடி தரையில் விழுந்தாள். அதன்பின்னர் நான் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டேன். தலைமறைவாக இருந்த என்னை போலீசார் கைது செய்தனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.