காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி தொடருகிறது திருநாவுக்கரசர் பேட்டி


காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி தொடருகிறது திருநாவுக்கரசர் பேட்டி
x
தினத்தந்தி 14 May 2018 4:45 AM IST (Updated: 14 May 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி தொடருகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

ஆலந்தூர்,

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

கர்நாடகவில் நடந்துள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். 5 ஆண்டுகள் ஊழல் இல்லாத சிறந்த ஆட்சியை சித்தராமையா நடத்தி உள்ளார்.

பாரதீய ஜனதா கட்சிக்காக பிரதமர், மத்திய மந்திரிகள், பாரதீய ஜனதா முதல்வர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு பணம் மலைபோல் செலவு செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் காங்கிரஸ்தான் வெற்றி பெறும்.

இந்தியாவில் எந்த கூட்டணியும் ஆயுட்காலம் ஒப்பந்தம் போட்டது இல்லை. கூட்டணி என்பது தேர்தல் நேரங்களில் சீட் மற்றும் வெற்றியின் அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டியது ஆகும். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி தொடர்கிறது.

கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலின்போது தனித்தனியாக தான் போட்டியிட்டோம். சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். தற்போதும் கூட்டணி இருக்கிறது. அது தொடருகிறது. தமிழகத்தில் எதிர்காலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது இலக்கு.

10 ஆண்டுகள் கழித்தோ, 20 ஆண்டுகள் கழித்தோ வரலாம். அதனால் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது என்று அர்த்தமில்லை. காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று கூறினால் தி.மு.க.வை விட்டு வெளியேறுவதாக கருதவேண்டியது இல்லை.

3–வது அணி என்பதே கிடையாது. அதற்கு யார் தலைவர்? அதில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றன? 3–வது அணியில் மம்தாவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இருப்பார்களா?... அப்படி உருவாக வாய்ப்பு இல்லை. உருவானாலும் ஆட்சி அமைக்க முடியாது.

பாரதீய ஜனதாவுக்கு மாற்று காங்கிரஸ்தான். பிரதமர் மோடி அகற்றப்பட வேண்டும். காவிரி பிரச்சினையில் 14–ந் தேதி (இன்று) மத்திய அரசு வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

மத்திய அரசு என்ன தாக்கல் செய்கிறது என்பதை பார்ப்போம். இது தொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் அடுத்த கட்டமாக என்ன செய்வது முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story