திருப்பூரில் மழைக்கு சேதமான மின்கம்பிகளை சீரமைக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 96 பேர் கைது


திருப்பூரில் மழைக்கு சேதமான மின்கம்பிகளை சீரமைக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 96 பேர் கைது
x
தினத்தந்தி 15 May 2018 4:30 AM IST (Updated: 15 May 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் மழைக்கு சேதமான மின்கம்பிகளை சீரமைக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 39 பெண்கள் உள்பட 96 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூரில் கடந்த 12–ந் தேதி இரவு பலத்த காற்றுடன் மழை கொட்டியது. இதன்காரணமாக மாநகரில் 50–க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் பல இடங்களில் மின்கம்பிகள் அறுந்து மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் அதை சீரமைத்தனர். இதில் மங்கலம் ரோடு குள்ளேகவுண்டன்புதூர் பகுதியில் மரங்கள் சாய்ந்ததில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. மேலும் மின்கம்பிகள் சேதமானது. இதன்காரணமாக அந்த பகுதியில் 100–க்கும் மேற்பட்ட வீடுகளில் கடந்த 2 நாட்களாக மின்தடை ஏற்பட்டுள்ளது.

மங்கலம் ரோடு விரிவாக்கப்பணிக்காக தோண்டப்பட்ட குழியால் குடிநீர் குழாய் சேதமடைந்து அந்த பகுதியில் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பழுதடைந்த மின்கம்பிகளை சரி செய்து மின்சாரம் வினியோகம் செய்யக்கோரியும், குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரியும் குள்ளேகவுண்டன்புதூரை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை 9 மணி அளவில் மங்கலம் ரோடு கோழிப்பண்ணை அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக மங்கலம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் மத்திய போலீசார் அங்கு விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசினார்கள். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 39 பெண்கள் உள்பட 96 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மறியல் போராட்டம் காரணமாக ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த மறியல் போராட்டத்தை தொடர்ந்து, குள்ளேகவுண்டன்புதூர் பகுதியில் சேதமான மின்கம்பிகளை மின்வாரிய ஊழியர்கள் நேற்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.


Next Story