புதிய டாஸ்மாக் கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு கலெக்டரிடம் கோரிக்கை மனு


புதிய டாஸ்மாக் கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு கலெக்டரிடம் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 15 May 2018 4:15 AM IST (Updated: 15 May 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே மகாராஜபுரத்தில் புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

விளாத்திகுளம் அருகில் உள்ள ஜமீன்கோடாங்கிபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மகாராஜபுரம் கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில்,‘ எங்கள் ஊரில் மாரியம்மன் கோவில் பின்புறம் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க தற்போது ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாரியம்மன் கோவில் அருகே அரசு பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், தற்போது டாஸ்மாக் கடை அமைய உள்ள இடம் வழியாக தான் சென்று வருகிறார்கள். அந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

எனவே பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நலன்கருதி அந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

தூத்துக்குடி தாலுகா குலையன்கரிசல் கிராம விவசாய சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘தூத்துக்குடி தாலுகாவில் குலையன்கரிசல் கிராமத்துக்கு பாத்தியப்பட்ட 3 குளங்கள் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த குளங்கள் அனைத்தும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டன. தற்போது மேடாகி காணப்படுகிறது. முதல்-அமைச்சர் அரசாணைப்படி இலவச மண் கரம்பல் திட்டத்தின் கீழ் குளங்கள் தூர்வாரப்பட்டது. தற்போது குளத்துக்கு சம்பந்தமில்லாதவர் கொடுத்த மனுவின்படி, தூத்துக்குடி தாசில்தார் இலவசமாக மண் எடுப்பதற்கான சீட்டை வழங்க மறுக்கிறார்.

எனவே மாவட்ட நிர்வாகம் இலவசமாக மண் எடுக்க சீட்டு வழங்கி, குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் சங்கத்தின் மூலம் மறியல் போராட்டம் நடத்தப்படும் என கூறிஇருந்தனர்.

தெற்கு வண்டானம் கிராம விவசாயிகள் கொடுத்த மனுவில், ‘நாங்கள் 2016-17-ம் ஆண்டு எங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் உளுந்து, பாசி, பருத்தி, கரும்பு, மிளகாய், வாழை, மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்கு காப்பீடு தொகை செலுத்தி வந்தோம். மேற்கண்ட பயிர்களை பயிரிட்ட நாங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளோம்.இதில் எங்கள் பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் மக்காள சோளத்துக்கு மட்டும் காப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. மற்ற பயிர்களுக்கு காப்பீடு வழங்கப்படவில்லை. எனவே மற்ற பயிர்களுக்கும் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

த.மா.கா. தூத்துக்குடி நேரு காலனி கிளை செயலாளர் ஆறுமுகம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து உட்பட்ட நேரு காலனியில் குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.

இங்கு குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுத்து நிறுத்த அரசு சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

ஓட்டப்பிடாரம் மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘ஓட்டப்பிடாரம் தாலுகாவில் தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் பல அரசு புறம்போக்குஇடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஓட்டப்பிடாரம் முதல் மேலலட்சுமிபுரம் வரை உள்ள சாலைகளில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான கனரக வாகனங்கள் சென்று வருவதால் சேதம் அடைந்து உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல், அந்த நிறுவனங்களுக்கு உடந்தையாக சில அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். 

Next Story