வங்கி கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது நகைகள், தோட்டாக்கள் பறிமுதல்


வங்கி கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது நகைகள், தோட்டாக்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 15 May 2018 4:45 AM IST (Updated: 15 May 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து நகைகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த அசேஷம் பகுதியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் கடந்த 7-ந் தேதி மதியம் காரில் வந்த மர்ம நபர்கள் 5 பேர் வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.5 லட்சத்து 58 ஆயிரம் மற்றும் 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தலைமறைவாகி விட்டனர்.

மன்னார்குடி பகுதியில் முதல் முறையாக துப்பாக்கி முனையில் நடந்த இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொள்ளை சம்பவம் நடந்த வங்கியில் திருச்சி மண்டல ஐ.ஜி. வரதராஜூலு, தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண் டனர்.

மேலும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மண்டல ஐ.ஜி வரதராஜூலு தெரிவித்தார்.

இதனையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த தனிப்படையினர் கடந்த 12-ந் தேதி இந்த கொள்ளை சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்த மணப்பாறையில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஊழியரான தூத்துக்குடியை சேர்ந்த மரியசெல்வம் மற்றும் அவருடைய கூட்டாளிகளான கார் டிரைவர் முத்துக்குமார்(27) மீரான் மைதீன்(29) சுடலைமணி(26) ஆகிய 4 பேரை கைது செய்தனர். கைதானவர்களிடமிருந்து ரூ.2½ லட்சம், 2 துப்பாக்கிகள் மற்றும் 2 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை தனிப்படையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ராமநாதபும் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த ராஜா(28) மற்றும் மதுரையை சேர்ந்த அயூப்கான்(33) ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைதான ராஜாவிடம் இருந்து 7½ பவுன் நகைகள் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய துப்பாக்கியின் 5 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற ராஜாதான் துப்பாக்கியை வாங்கியதாகவும், வங்கியில் தரையில் சுட்டதும் அவர்தான் என்றும், இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை தேடிவருவதாகவும் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தெரிவித்தார். 

Next Story