பழனி முருகன் கோவில் சிலை மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது
ஐம்பொன் சிலை செய்ததில் நடந்த மோசடி தொடர்பாக, பழனி முருகன் கோவில் முன்னாள் உதவி ஆணையர் உள்பட 2 பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பழனி,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், 3–ம் படை வீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலின் மூலவர் சன்னதியில், போகர் என்னும் சித்தரால் நவபாஷாணம் மூலம் உருவாக்கப்பட்ட முருகப்பெருமான் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பதிலாக, ஐம்பொன்னால் ஆன புதிய சிலை செய்ய இந்து சமய அறநிலையத்துறையினர் முடிவு செய்தனர்.
இதற்காக, திருத்தணி முருகன் கோவில் நிர்வாகத்திடம் இருந்து 10 கிலோ தங்கமும் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய சிலையை ஸ்தபதி முத்தையா தலைமையிலான குழுவினர் உருவாக்கினர். பின்னர் இந்த சிலை, மூலவர் சன்னதியில் உள்ள நவபாஷாண சிலைக்கு முன்பு வைக்கப்பட்டு பூஜைகளும் நடத்தப்பட்டது.
ஒரு கருவறையில், 2 சிலைகள் இருப்பதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடந்த 2004–ம் ஆண்டு புதிய சிலை அகற்றப்பட்டது. இந்தநிலையில் புதிதாக முருகன் சிலை செய்ததில் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சிலை செய்ததில் மோசடி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஸ்தபதி முத்தையா, அப்போதைய பழனி முருகன் கோவில் இணை ஆணையராக இருந்த கே.கே.ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கு விசாரணை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இந்தநிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், துணை சூப்பிரண்டு கருணாகரன் தலைமையிலான குழுவினர் பழனியில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். சென்னை ஐ.ஐ.டி. உலோகவியல் துறை பேராசிரியர் முருகைய்யா தலைமையிலான குழுவினரும் பழனிக்கு வந்து ஐம்பொன் மற்றும் உற்சவர் சிலைகளை ஆய்வு செய்தனர்.
கோவிலில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதோடு கோவில் அதிகாரிகள், ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஸ்தபதி முத்தையா மற்றும் 2004–ம் ஆண்டு பழனி கோவில் இணை ஆணையராக இருந்த கே.கே. ராஜா ஆகியோருக்கு உடந்தையாக ஐம்பொன் சிலை தொடர்பான ஆவணங்களில், அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையராக இருந்த பழனி பழைய ஆயக்குடி கிழக்குதெருவை சேர்ந்த புகழேந்தி (வயது 60) கையொப்பமிட்டிருப்பது தெரியவந்தது.
இதேபோல் ஆகம விதிப்படிதான் சிலை செய்யப்பட்டுள்ளது என்று, அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட நகை சரிபார்ப்பு அதிகாரியான சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த தேவேந்திரன் (67) சான்றிதழ் வழங்கி இருக்கிறார். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் கைது எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
கைது செய்யப்பட்ட 2 பேரும், கும்பகோணத்தில் உள்ள கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை வருகிற 28–ந்தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்பேரில் 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.