தலைவாசல் அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல்- சாலை மறியல்


தலைவாசல் அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல்- சாலை மறியல்
x
தினத்தந்தி 15 May 2018 10:30 PM GMT (Updated: 15 May 2018 10:09 PM GMT)

தலைவாசல் அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

தலைவாசல்,

தலைவாசல் அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் சாலை மறியல் போராட்டமும் நடந்தது. இது தொடர்பாக 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தலைவாசல் அருகே உள்ள இலுப்பநத்தம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு திருவிழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது வேப்பம்பூண்டி மேடு பகுதியில் இருந்து இளைஞர்கள் சிலர் வேடிக்கை பார்க்க வந்தனர். அவர்களில் சிலர் கலைநிகழ்ச்சியில் நடனம் ஆடிய பெண்களுக்கு பணம் கொடுக்க முயன்றனர்.

அதனை இலுப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் தடுத்தனர். இதனால் அவர்களுக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்களை அங்கிருந்தவர்கள் கலைத்து விட்டனர். தொடர்ந்து வேப்பம்பூண்டி மேடு பகுதியை சேர்ந்தவர் தங்களது கிராத்தை நோக்கி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களை பின்தொடர்ந்து சென்ற இலுப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த சிலர் அவர்களை தடுத்து நிறுத்தி, நடந்த சம்பவத்தை தட்டிக்கேட்டனர்.

இதைத்தொடர்ந்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வேப்பம்பூண்டி மேட்டு பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (வயது 21), பரமேஸ்வரன் (23), இலுப்பநத்தத்தை சேர்ந்த அண்ணாதுரை (50) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, வேப்பம்பூண்டி மேடு பகுதியை சேர்ந்த இளைஞர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தலைவாசல்-வீரகனூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இரவு 10.30 மணிக்கு தொடங்கிய மறியல் நள்ளிரவு வரை நீடித்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்கார்த்திக்குமார், வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதனிடையே இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டதற்காக கிராம நிர்வாக அலுவலர் முத்தையன் கொடுத்த புகாரின் பேரில், வேப்பம்பூண்டி மேடு பகுதியை சேர்ந்த 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story