மாவட்ட செய்திகள்

நிர்மலாதேவி விவகாரம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை + "||" + Nirmaladevi affair: CBCID police investigate at Madurai Kamaraj University

நிர்மலாதேவி விவகாரம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

நிர்மலாதேவி விவகாரம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மீண்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளது.

மதுரை,

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட அதிகாரி சந்தானம் தனது அறிக்கையை கவர்னரிடம் சமர்ப்பித்துள்ளார். ஆனால், சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக பல்கலைக்கழகத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்த விவகாரம் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் பல்கலைக்கழகம் மீண்டும் வந்துள்ளது. இதற்காக சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் நேற்று காலை 11 மணிக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்தனர்.

பின்னர் மு.வ.அரங்கில் வைத்து பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக பல்கலைக்கழகத்தில் உள்ள 80 துறைகளை சேர்ந்த பேராசிரியர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து நேற்றைய விசாரணையில், பல்வேறு துறைகளின் தலைவர்கள், மூத்த பேராசிரியர்கள் என 36 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணை நேற்று இரவு 7.30 மணி வரை சுமார் 8 மணி நேரம் தொடர்ச்சியாக நடந்தது. விசாரணையின் போது, நிர்மலாதேவிக்கும், பல்கலைக்கழகத்துக்கும் உள்ள தொடர்பு, பல்கலைக்கழக உயரதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு, கல்விப்பேரவை, ஆட்சிப்பேரவை, ஆட்சிமன்றக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் உள்ளவர்களுடனான தொடர்பு, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரிக்கும், பல்கலைக்கழகத்துக்குமான அலுவல் ரீதியான பணிகளில் தொடர்புள்ளவர்கள் என வெவ்வேறு கோணங்களில் போலீசாரின் கேள்விகள் இருந்ததாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து, இந்த விசாரணை இன்று (வியாழக்கிழமை) தொடர்ந்து நடைபெறும் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் இந்த விசாரணையால், பல்கலைக்கழக வளாகம் நேற்று காலை முதல் பரபரப்பாக காணப்பட்டது.