கனடாவில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.13½ லட்சம் தங்க நகைகள் சிக்கியது
கனடாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.13 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கனடாவில் இருந்து ஜெர்மன் வழியாக விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது கனடா நாட்டை சேர்ந்த கிருஷ்ணகந்தன் (வயது 69) என்பவரது உடைமைகளை சோதனை செய்தபோது, தங்க சங்கிலிகள், தங்க வளையங்கள், டாலர்களை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
அவரிடம் இருந்து ரூ.13 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 430 கிராம் தங்க நகைகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கனடா நாட்டுக்காரரான கிருஷ்ணகந்தனிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் ஏற வந்த சென்னையை சேர்ந்த முகமது சலீம் (45) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தனியாக அழைத்துச் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அவர், சவுதி ரியால் மற்றும் அமெரிக்க டாலர்களை தனது உள்ளாடைகளுக்கு உள்ளும், சூட்கேசிலும் மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.
அவரிடம் இருந்து சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து முகமது சலீமின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், கடத்தப்பட இருந்தது ஹவாலா பணமா? என விசாரித்து வருகின்றனர்.