மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி பல லட்சம் ரூபாய் தப்பியது + "||" + ATM. The robbery of the machine had escaped several lakh rupees

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி பல லட்சம் ரூபாய் தப்பியது

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி பல லட்சம் ரூபாய் தப்பியது
குடியாத்தம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கீழ்ஆலத்தூரில் காட்பாடி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு அருகிலேயே வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்திற்கு காவலாளி கிடையாது.

நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் மின்விளக்கை அணைத்துவிட்டு, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா வயர்களை துண்டித்துள்ளார். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, அதிலிருந்த பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார். இதில் ஏ.டி.எம் எந்திரத்தின் மேல்பக்கத்தை உடைத்து, உள்ளே உள்ள கதவை திறக்க முயற்சித்துள்ளார்.

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் சென்ற 2 பேர் ஏ.டி.எம். மையம் இருட்டாக இருப்பதையும், அங்கிருந்து தீப்பொறி போன்ற வெளிச்சம் வந்ததையும் கண்டு மோட்டார்சைக்கிளை நிறுத்தி உள்ளனர். பின்னர் மோட்டார்சைக்கிளில் உள்ள ஹெட்லைட் மூலம் ஏ.டி.எம். மையத்தை பார்த்தபோது ஒருவர் நிற்பதுபோல் தெரிந்துள்ளது.

இதனையடுத்து மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு நடந்து சென்றபோது ஏ.டி.எம். மையத்தில் இருந்து மர்ம நபர் ஒருவர் முகத்தில் துணியை கட்டியபடி வெளியே வந்து, அங்கிருந்து வேகமாக ஓட்டம் பிடித்து இருட்டில் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, இன்ஸ்பெக்டர்கள் கவிதா, இருதயராஜ், செங்குட்டுவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மர்ம நபர் ஏ.டி.எம். மையத்தை உடைக்க பயன்படுத்திய அரிவாளை போலீசார் கண்டெடுத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வங்கியை சேர்ந்த அதிகாரிகள் வந்தனர். வேலூரில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் சன்னி சிறிதுதூரம் ஓடிசென்று நின்றது.

தொடர்ந்து வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். எந்திரத்தை திறந்து சரிபார்த்தபோது அதிலிருந்த பணம் எதுவும் கொள்ளை போகவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிலிருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

மேலும் போலீசார் வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் கவிதா, செங்குட்டுவன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.