கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்: விவசாய சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்


கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்: விவசாய சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 May 2018 5:00 AM IST (Updated: 19 May 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று விவசாய சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள திருமழபாடியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் மணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வரபிரசாதம், மாவட்ட குழு உறுப்பினர் தங்கமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஜெயபால் வரவேற்றார். கூட்டத்தில் கொள்ளிட நீராதார பாதுகாப்பு குழு தனபால், ராஜேந்திரன், நடராஜன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.

தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் சாமி நடராஜன் பேசுகையில், “திருமானூர் ஒன்றியத்தில் உள்ள கொள்ளிடம் ஆறு 8 மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த மணல் குவாரியை அரசு நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். மேலும், கல்லணை முதல் கீழணை வரை கொள்ளிடம் ஆற்றை குடிநீர் பாதுகாப்பு மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்’ என்று கூறினார்.

கூட்டத்தில், காங்கிரஸ் மாவட்ட மகளிரணி தலைவி மாரியம்மாள், பா.ம.க. மாவட்ட தலைவர் ரவிசங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்டகுழு உறுப்பினர் சவுரிராஜன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அசோகசக்ரவர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story