மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வரும் மக்களின் சிரமங்களை தவிர்க்க ஏற்பாடுகள்


மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வரும் மக்களின் சிரமங்களை தவிர்க்க ஏற்பாடுகள்
x
தினத்தந்தி 19 May 2018 12:15 AM GMT (Updated: 19 May 2018 12:15 AM GMT)

மனு அளிக்க வரும் மக்களின் சிரமங்களை போக்குவதற்கு தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வரும் மக்களின் சிரமங்களை போக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து வருகிறது. அதன்படி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்கள் அளித்து வந்தனர்.

இவ்வாறு பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மனு அளிக்க வரும் மக்கள் சிலர் மனுவை எழுதிக் கொண்டு வந்தனர். சிலர், பணம் கொடுத்து மனு எழுதியோ, தட்டச்சு மூலம் மனு செய்து கொண்டு வருவார்கள். மனு அளிக்க வரும் மக்களின் சிரமத்தை போக்கவும், மனுக்கள் தயார் செய்து கொடுக்கவும் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவின்பேரில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி பொதுமக்களுக்கு இலவசமாக மனு தயார் செய்து கொடுக்க தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன், மனுக்களை பதிவு செய்யும் இடங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் போது, மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சிரமம் அடைந்து வந்தனர். அந்த சிரமத்தையும் போக்கும் வகையில் தனித்தனி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி மனுக்கள் பதியும் இடத்தில் மொத்தம் 8 வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதல் 4 வரிசைகள் மனுக்கள் பதிவு செய்வதற்கும், கடைசி 4 வரிசைகள் மனுக்கள் தயார் செய்து கொடுக்கவும் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், ஆண்கள், பெண்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மனு அளிக்க வரும் மக்கள் தங்களுக்கான வரிசையில் சென்று மனு அளிக்க வேண்டிய விவரங்களை தெரிவித்தால் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் மனுக்களை கட்டணம் இன்றி தயார் செய்து கொடுப்பார்கள். அதை பதிவு செய்துவிட்டு, கலெக்டரிடம் கொடுக்கலாம். இந்த ஏற்பாடு பொதுமக்களுக்கு பெரிதும் உதவும் வகையில் உள்ளது.


Next Story