ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி அவதார திருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் தரிசனம்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி அவதார திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்திருப்பேரை,
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி அவதார திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
ஆதிநாதர் ஆழ்வார் கோவில்தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளில் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் வைகாசி அவதார திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான வைகாசி அவதார திருவிழா நேற்று காலை 7.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருவிழா வருகிற 28–ந் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் நம்மாழ்வார் வீதிஉலா நடக்கிறது.
23–ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மங்களாசாசனம் நடக்கிறது. அதனை தொடர்ந்து இரவில் கருட சேவை நடக்கிறது. இதற்காக ஸ்ரீவைகுண்டம், நத்தம் திருப்புளியங்குடி, இரட்டைதிருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர் ஆகிய இடங்களில் இருந்து பெருமாள் எழுந்தருளி, ஆதிநாதர் கோவிலை வந்தடைகிறார்.
தேரோட்டம்பின்னர் இரவில் கருட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதிஉலா புறப்பாடு நடக்கிறது. 27–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், 28–ந் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி விஸ்வநாத், வ.உ.சி. இளைஞர் பேரவை தலைவர் கோமதிநாயகம், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.