முதுமலை ஊராட்சிக்குள் வாகனங்களை இயக்க அனுமதி மறுப்பு: வனத்துறையினரை கண்டித்து சோதனைச்சாவடி முற்றுகை
முதுமலை ஊராட்சியில் வாகனங்களை இயக்க அனுமதி மறுத்ததால் வனத்துறையினரை கண்டித்து சோதனைச்சாவடியை கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.
கூடலூர்,
கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சி புலிகள் காப்பக வனத்தில் முதுகுளி, நாகம்பள்ளி, கல்லஞ்சேரி, புலியாளம், கோலிமலை உள்ளிட்ட பல குக்கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 1.500 பேர் பல தலை முறைகளாக விவசாயம், கூலி வேலை செய்து வசித்து வருகின்றனர். மேலும் பாதுகாக்கப்பட்ட வனம் என்பதால் கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வில்லை. இதனால் ஊராட்சி பகுதிக்கு பஸ் வசதி கிடையாது. கிராமங்களில் இருந்து பல கிலோ மீட்டர் தூரம் கால்நடையாக நடந்து போஸ்பாரா என்ற இடத்துக்கு செல்ல வேண்டி உள்ளது.அங்கு வனத்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ஊராட்சி பகுதியில் விளையும் நேந்திர வாழைத்தார்கள், பாகற்காய் உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை கிராம மக்கள் அறுவடை செய்து கூடலூர் மற்றும் கேரளா மாநில வியாபாரிக ளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் வழக்கம் போல் விவசாய விளைபொருட் களை ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று போஸ்பாரா வனத்துறை சோதனைச்சாவடி வழியாக கூடலூருக்கு சென்றது.
முதுகுளி கிராமத்தை சேர்ந்த மினி லாரி டிரைவர் ஒருவர் விளைபொருட்களை வியாபாரியிடம் கொடுத்து விட்டு மீண்டும் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு 9 மணிக்கு போஸ்பாரா சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணியில் இருந்த வன காப்பாளர் ஒருவர் மினி லாரி முதுமலை ஊராட்சிக்குள் செல்ல அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த கிராம மக்கள் பலர் திரண்டு வந்து வனத்துறையினரிடம் கேட்டனர். அப்போது உரிய அனுமதி பெற்றால் மட்டுமே மினி லாரியை ஊராட்சி பகுதிக்குள் அனுமதிக்க முடியும் என வனத் துறையினர் தெரிவித்தனர். இதனால் மினி லாரி அங்கேயே நிறுத்தப்பட்டது.
மேலும் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் கிராம மக்கள் அங்கிருந்து சென்றனர். நேற்று காலை 9 மணிக்கு முதுமலை ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் வனத்துறையினரை கண்டித்து சோதனைச்சாவடியை முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாசலம், சிவசங்கரன் உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் சார்பில் சிவக்குமார், சுரேஷ் ஆகியோர் போலீசாரிடம் பேசினர்.
அப்போது, முதுமலை வனச்சரகர் தயானந்த், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாசலம், சிவசங் கரன் ஆகியோர் ஊராட்சி பகுதிக்குள் வாகனங்கள் வழக்கம் போல் இயக்கலாம். எந்த தடையும் கிடையாது என்று உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து 1 மணி நேரத்துக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.