பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் - திருநாவுக்கரசர் பேச்சு
பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று ராமநாதபுரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசினார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர் தலைவர் அஜீஸ் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசியதாவது:– தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சென்று காங்கிரஸ் பூத் கமிட்டி முகவர்களை சந்தித்து ஆய்வு நடத்தி வருகிறேன். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 25 பேர் கொண்ட கிளையை தொடங்க வேண்டும். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பலம் வாய்ந்த கட்சிகளாக இருப்பதற்கு அவர்களின் பூத் கமிட்டி நிர்வாகிகள் தான் காரணம். தற்போது 30 லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.
வருகிற ஜூலை மாதம் 15–ந்தேதி காமராஜர் பிறந்த நாளுக்குள் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் பல சாதி, மத கட்சிகள் உள்ளன. மேலும் பல மாநில கட்சிகள் உள்ளன. ஆனால் இந்தியா முழுவதும் உள்ள ஒரே கட்சி காங்கிரஸ் தான்.
தமிழகத்தில் அ.தி.மு.க. பிளவுபட்டுள்ள நிலையில் தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சியாக காங்கிரஸ் தான் உள்ளது. பா.ஜ.க.வை வீழ்த்தக்கூடிய கட்சியாகவும், அதற்கு மாற்றான கட்சியாகவும் தேசிய அளவில் காங்கிரஸ் உள்ளது. இந்தியா முழுவதும் ஏற்றுக்கொண்ட தலைவராக ராகுல்காந்தி உள்ளார். 3–வது அணிக்கு வாய்ப்பு இல்லை. பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். தற்போது தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் இணைந்து செயல்பட்டு வருகிறோம். தேர்தலுக்கு முன்பு இன்னும் பல கட்சிகள் வரக்கூடும்.
நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கி உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இவர்களை மக்கள் ஏற்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவர்களை காங்கிரஸ் எதிரியாக கருதவில்லை. யாரும் கட்சி ஆரம்பித்தவுடன் முதல்–அமைச்சராகி விட முடியாது. ஜனநாயக நாட்டில் இறுதி முடிவு மக்கள் கையில் தான் உள்ளது. ஒரு தேர்தலையாவது சந்தித்தால் தான் அவர்களின் மக்கள் செல்வாக்கு என்ன என்பது தெரியும். முதல் தேர்தலிலேயே நடிகர்கள் வெற்றிபெறாவிட்டால் அவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது.
மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. பா.ஜ.க. கொல்லைப்புறம் வழியாக ஆட்சியை பிடித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் 30–க்கும் மேற்பட்ட தொகுதியில் பா.ஜ.க. டெபாசிட் இழந்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரசுக்கு மக்கள் அதிக வாக்களித்துள்ளனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமராவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ரமேஷ்பாபு, விக்டர், குட்லக் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாரிராஜன், சாயல்குடி வேலுச்சாமி, நகர் தலைவர் கோபி, முத்துராமலிங்கம், பரமக்குடி ஆலம், திருப்புல்லாணி வட்டார தலைவர் சேதுபாண்டியன், செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம், இலக்கிய அணி முருகேசன், அகில இந்திய உறுப்பினர் செந்தாமரை கண்ணன், வட்டார தலைவர் ஜோதிபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தொடருகிறது. அதிகாரம் பொருந்திய காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் முன்வரவேண்டும். காங்கிரஸ் கட்சி எப்போதும் தமிழக விவசாயிகள் பக்கம் இருக்கும். மத்திய பா.ஜ.க. அரசின் பினாமி அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.