காவிரி தீர்ப்பால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை திருச்சியில் வைகோ பேட்டி


காவிரி தீர்ப்பால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை திருச்சியில் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 19 May 2018 11:00 PM GMT (Updated: 19 May 2018 9:29 PM GMT)

காவிரி தீர்ப்பால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை என்று திருச்சியில் வைகோ கூறினார்.

செம்பட்டு,

காவிரி நதிநீர் பிரச்சினையில் நான் கூறியபடி நடந்து விட்டது. மத்திய அரசின் தந்திரத்துக்கும், சூழ்ச்சிக்கும் தமிழக அரசு பலியாகிவிட்டது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு படி, அப்போது இருந்த வி.பி.சிங் அரசு நடுவர் நீதிமன்றத்தை அமைத்தது. அந்த நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நமக்கு முழுமையான நீதி கிடைக்காவிட்டாலும் ஒரு பாதுகாப்பு கிடைத்தது. அந்த பாதுகாப்பும் இப்போது இல்லாமல் போய்விட்டது. இப்போது அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தில் அந்த பாதுகாப்பு இல்லை. இப்போது கூறப்பட்டுள்ள தீர்ப்பின்படி கர்நாடக அரசு புதிய அணைகளை கட்டிக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. தன் அதிகாரம் என்ற பகுதியை முழுமையாக எடுத்து விட்டார்கள்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும், இப்போது ஆணையத்துக்காக அமைக்கப்பட உள்ள குழுவையும் ஒப்பிட்டு பார்த்தால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு இருப்பது தெரியவரும். காவிரி தீர்ப்பால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை. இது தெரியாமல் தமிழக அரசு தீர்ப்பை வரவேற்பதோடு, தமிழக மக்களையும் ஏமாற்றி கொண்டு இருக்கிறது. காவிரி வழக்கில் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் உரிமையை நிலை நாட்ட தவறி விட்டனர். கர்நாடகாவில் புதிய அணைகளை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டது. புதிய அணைகள் கட்டப்பட்டு விட்டால் வெள்ள காலங்கள் தவிர மற்ற நேரங்களில் தமிழகத்துக்கு தண்ணீர் வராது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story