ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற மறுப்பது மக்கள் மீதான ஆட்சியாளர்களின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது


ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற மறுப்பது மக்கள் மீதான ஆட்சியாளர்களின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது
x
தினத்தந்தி 20 May 2018 4:00 AM IST (Updated: 20 May 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற மறுப்பது மக்கள் மீதான ஆட்சியாளர்களின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது என்று, சீமான் கூறினார்.

திருவாலங்காடு,

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக நேற்று நடந்த ஒரு ஆண்டு நிறைவு போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஆய்வால் நிலம், நீர், காற்று மாசுபடுகிறது. மக்கள் சொந்த மண்ணில் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது. பூமியை மனித உடலாக பார்க்க வேண்டும். நதிகள் இயற்கையாக உருவானது. அவை பூமியின் ரத்த நாளங்கள். நதிகளின் தோல் தான் மணல்.

மணல் என்பது உலகின் தலை சிறந்த நீர்வடிகட்டி. ஆற்றின் தோலான மணலை எடுக்கும்போது ஆறு மரணம் அடைகிறது. நீரை தேக்கி வைக்கும் திறனை இழந்து விடுகிறது. ஆற்றங்கரையில் உள்ள பனை, தென்னை மரங்கள் பாதிக்கப்படுகிறது என்றால் அந்த ஆறு மரணமடைந்து விட்டது என்பது தெளிவாகும். தற்போது நமது நிலம் பாலைவனமாக மாற்றப்படுகிறது. இயற்கை வாயு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவற்றை பூமிக்கு அடியில் இருந்து எடுத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிக்க தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும்.

கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற மறுத்ததால் கதிராமங்கலம் மக்கள் கடந்த ஓராண்டு காலமாக போராடி வருகிறார்கள். இது மக்கள் மீதான ஆட்சியாளர்களின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. மக்களின் தேவையை நிறைவேற்ற முன்வராத அரசு தேவையில்லை.

இந்த பிரச்சினைக்காக கதிராமங்கலம் மக்கள் மட்டும் போராடக்கூடாது. சுற்றி உள்ள கிராம மக்களும் கதிராமங்கலம் மக்களுக்கு துணை நிற்க வேண்டும். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முழுவதுமாக வெளியேற்றப்பட வேண்டும். அதுவரை மக்களின் அறவழிப்போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசியதாவது:-

கதிராமங்கலத்தில் மண்ணை காக்கும் மக்களின் போராட்டம் அரசியல் தலைவர்களால் நடத்தப்படுவதில்லை. மக்களின் ஒற்றுமையால் நடத்தப்படுவதால் தான் இத்தனை உணர்வோடு ஓராண்டாக அறவழி போராட்டம் நடக்கிறது. ஓ.என்.ஜி.சி. ஆய்வால் காவிரி படுகையே பாதிக்கப்பட்டுள்ளது. நாம் தொடர்ந்து போராடி மண்ணை காக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இயக்குனர் கவுதமன் பேசுகையில், மக்களின் குறைகளை தற்போது யாரிடம் கூறுவது என்றே தெரியவில்லை. அந்த வகையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். ஓட்டு போட்டு கோட்டைக்கு அனுப்பியவர்களிடம் கூறியும் எந்த பலனும் இல்லை. மத்திய-மாநில அரசுகள் போராடும் மக்களை பற்றி கவலைப்படவில்லை. இது வேதனையானது.

விவசாயிகள், மீனவர்கள் என அனைவரும் போராடுகின்றனர். மக்களின் கண்ணீரை துடைக்க யாரும் இல்லாத நிலை உள்ளது. தமிழகத்தின் இயற்கை வளங்களை காக்க அனைவரும் தொடர்ந்து போராட வேண்டும் என்றார். 
1 More update

Next Story