டி.என்.பி.எஸ்.சி. நடத்திய பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர் பணிக்கான எழுத்துத்தேர்வு


டி.என்.பி.எஸ்.சி. நடத்திய பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர் பணிக்கான எழுத்துத்தேர்வு
x
தினத்தந்தி 21 May 2018 4:15 AM IST (Updated: 21 May 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர் பணிக்கான எழுத்துத்தேர்வு நாகர்கோவிலில் 4 இடங்களில் நடந்தது.

நாகர்கோவில்,

தமிழக அரசின் பொதுப்பணித்துறைகளில் (நீர், நெடுஞ்சாலை, கட்டிடம், மின்சாரம், ஊரக வளர்ச்சி) உள்ள உதவி என்ஜினீயர் பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த காலிப்பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டம் பெற்ற தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த நிலையில், உதவி என்ஜினீயர் பணிக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.

அதன்படி குமரி மாவட்டத்தில், நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, இந்து கல்லூரி ஆகிய 4 இடங்களில் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய எழுத்து தேர்வு நடந்தது. தேர்வு முதல்தாள் மற்றும் இரண்டாம் தாள் என இரு பகுதிகளாக நடந்தது. முதல் தாள் தேர்வு, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், இரண்டாம் தாள் தேர்வு மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் நடைபெற்றது.

தேர்வு அறைக்குள் செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, தேர்வுமையங்களுக்குள் யாரேனும் எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துகிறார்களா? என்பதை கண்காணிக்க அதிகாரிகள் தலைமையில் 2 கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

குமரி மாவட்டத்தில், 2 ஆயிரத்து 402 பொறியியல் பட்டதாரிகள் தேர்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் சுமார் 400 பேர் தேர்வு எழுத வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். டி.என்.பி.எஸ்.சி. தேர்வை யொட்டி தேர்வுமையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

Next Story