மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கவில்லை என்றால் போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் நிச்சயம் உருவாகும்


மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கவில்லை என்றால் போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் நிச்சயம் உருவாகும்
x
தினத்தந்தி 20 May 2018 11:00 PM GMT (Updated: 20 May 2018 9:51 PM GMT)

மேட்டூர் அணையில் ஜூன் மாதம் தண்ணீர் திறந்து விடக்கூடிய சூழல் உருவாக்க வேண்டும், இல்லை என்று சொன்னால், தி.மு.க. தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் நிச்சயம் உருவாகும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

வேளாங்கண்ணி,

மத்தியிலே இருக்கிற மதச்சார்புடைய, மதவெறி பிடித்த பா.ஜ.க. ஆட்சிக்கு ஒரு முட்டுக்கட்டை போட வேண்டும். அவ்வளவு ஏன்? அந்த ஆட்சியையே அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு இப்பொழுதே நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, தமிழகத்திலே இருக்கக் கூடிய நாம் மட்டும் அல்ல, அகில இந்திய அளவில் இருக்கக் கூடிய எல்லாத் தலைவர்களும் இன்றைக்கு அந்த முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில் இருந்து மம்தாபானர்ஜி, தெலுங்குதேச கட்சியின் தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் அதேபோல இன்னும் பல மாநிலங்களில் இருக்கும் முதல்-மந்திரிகள், பல்வேறு மாநிலங்களில் இருக்கும் பெரிய கட்சிகளின் தலைவர்கள் என பலரும் இன்றைக்கு அந்தப் பணியிலே ஈடுபட்டு இருக்கிறார்கள். அப்படி ஈடுபடுகிறபோது, இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நிலைமைகள் அனைத்தையும் அவர்கள் கண்கூடாக பார்க்கிறார்கள்.

வரக்கூடிய காலகட்டத்தில், நிச்சயமாக தி.மு.க. தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்று எண்ணி, வரப்போகிற தி.மு.க. ஆட்சியை நாமும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் இன்றைக்கு முடிவு செய்து இருக்கிறார்கள் என்று சொன்னால், இதற்கான உரிய முழு பெருமையும் கருணாநிதியை தான் முழுமையாக சாரும் என்பதை யாராலும் மறுத்திட முடியாது.

அண்மையிலே நடந்த காவிரிப் பிரச்சினையை பொறுத்தவரையில் சட்டரீதியாக, முழுமையாக அல்லாமல் ஓரளவிற்கு வெற்றி பெற்று இருக்கிறோம். இந்த வெற்றியை நாம் எப்படி பெற்றோம்? ஓரளவிற்கு நாம் வெற்றியை பெற்றிருக்கிறோம் என்று சொன்னால், எவ்வளவு ஆண்டுகாலம் நாம் சட்டப் பிரச்சினையை கையாண்டு இருக்கிறோம். அண்டை மாநிலங்களோடு ஒரு சுமூகமான உறவை ஏற்படுத்திக் கொண்டு கருணாநிதி அனைத்தையும் நிறைவேற்றி கொடுத்திருக்கிறார். ஆனால், இப்பொழுது மத்தியில் நடைபெற்று கொண்டிருக்கக்கூடிய ஆட்சியாக இருந்தாலும், தமிழகத்தில் நடை பெறும் ஆட்சியாக இருந்தாலும், காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நிலையிலே எவ்வளவு சுணக்கமான நிலையில் இருந்திருக்கிறார்கள்.

இப்படியே காலம் தாழ்த்தி, தாழ்த்தி இப்பொழுது ஓரளவிற்கு, காவிரி மேலாண்மை வாரியம் என்பதற்கு பதிலாக, காவிரி ஆணையம் என்ற பெயரை பயன்படுத்தி, அதேசமயம் வாரியத்திற்கு உள்ள அனைத்து அதிகாரங்களும், இந்த ஆணையத்திற்கும் உண்டு என்று சொல்லி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த கட்டுப்பாடுகள் முழுவதும் மத்திய அரசின் கையில் தான் இருக்கும் என்ற செய்தியையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு, நமக்கு ஒத்துபோகக் கூடிய செய்திகள் உச்ச நீதிமன்றத்தின் மூலம் வழங்கப்பட்டு இருந்தாலும், இன்னும் சில சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த சந்தேகங்களை போக்க வேண்டும் என்று சொன்னால், உடனடியாக தீர்ப்பை நிறைவேற்றி தரவேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை திறந்துவிடப்பட்டு, விவசாய மக்கள் பயன்பெற வேண்டும். இந்த ஏழு ஆண்டுகாலம் காவிரி நதி நீர் இல்லாமல் போனதை மாற்ற, இப்பொழுது கிடைத்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்துக்கொண்டு, ஜூன் மாதத்தில் தண்ணீர் திறந்து விடக்கூடிய சூழல் உருவாக்க வேண்டும். இல்லை என்று சொன்னால், தி.மு.க. தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் நிச்சயம் உருவாகும்.

மேலும், அறிவாலயத்தில், ஒத்த கருத்துடைய ஒன்பது கட்சிகளும் சேர்ந்து அனைத்துக் கட்சி கூட்டம், 22-ந்தேதி (நாளை) காலை 10 மணி அளவிலே நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் இதனை விவாதித்து, தீர்மானத்தையும் நிறைவேற்ற உள்ளோம். இந்த டெல்டா பகுதியிலே தான், ஒன்பது கட்சிகளோடு இணைந்து ஏறக்குறைய ஒருவார காலம், தமிழ்நாட்டில் அல்ல, இந்திய வரலாற்றில் இல்லாத அளவில் ஒரு மிகப்பெரிய மீட்பு பயணத்தை நடத்திக் காட்டினோம்.

அப்படி நடத்தும்போது, விவசாயிகள், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள், தாய்மார்கள் அத்துனைபேரும் எழுச்சியோடு ஆதரவு தந்ததை பார்த்த பிறகுதான். உச்ச நீதிமன்றமே, இறங்கி வந்து நமக்கு ஓரளவிற்கு சாதகமான தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். அப்படி வழங்கியிருக்கும் சாதகமான சூழ்நிலையை இங்கு இருக்கும் ஆட்சி முறையாக பயன்படுத்த வேண்டும்.

இன்னும் இரண்டு நாட்களில் கர்நாடக மாநிலத்தில் ஒரு புதிய அமைச்சரவை பதவி பிரமாணம் ஏற்றுக்கொள்ள இருக்கிறது. அதுவும், மதச்சார்பற்ற நிலையில் ஒரு ஆட்சி பொறுப்பேற்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே, நமது அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்கக் கூடிய ஆட்சியோடு ஒரு சுமூகமான சூழலை ஏற்படுத்தி, பேசி தீர்த்துக் கொண்டு. சட்டரீதியாக நாம் வெற்றிபெற்று இருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில், எந்தளவிற்கு தண்ணீரை பெற வேண்டுமோ, அந்தத் தண்ணீரை பெற்று, இந்த அரசு விவசாயிகளுக்கு வழங்க முன்வர வேண்டும். அப்படி வழங்க முன்வரவில்லை என்று சொன்னால், அதற்கான போராட்டத்தை தி.மு.க. விரைவிலே முன்னின்று நடத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story