நூதன முறையில் மணல் கடத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல்


நூதன முறையில் மணல் கடத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல்
x
தினத்தந்தி 20 May 2018 11:12 PM GMT (Updated: 20 May 2018 11:12 PM GMT)

வேலூரில் மணல் மீது வைக்கோல் பரப்பி நூதன முறையில் கடத்திய சரக்கு ஆட்டோவை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக காணப்படும் பாலாறு தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. பாலாற்றில் காணப்படும் மணல் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள், லாரி, சரக்கு ஆட்டோ போன்றவற்றின் மூலம் கடத்தும் சம்பவங்கள் நடந்து வருகிறது. பாலாற்றில் இருந்து மணல் அள்ளுவதால் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. எனவே, மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கலெக்டர் ராமன் உத்தரவின் பேரில் வேலூர் தாசில்தார் பாலாஜி மற்றும் வருவாய்த்துறையினர் வேலூர் தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று வேலூர் தாசில்தார் பாலாஜி தலைமையில் மண்டல துணை தாசில்தார் விநாயகமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் குமார் ஆகியோர் வேலூர் சேண்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட முயன்றனர்.

வருவாய்த்துறையினரை கண்டதும் டிரைவர் சாலையோரம் சரக்கு ஆட்டோவை நிறுத்திவிட்டு இறங்கி ஓட்டம் பிடித்தார். அதனால் சந்தேகம் அடைந்த வருவாய்த்துறையினர் சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில், மணலின் மேல் பகுதியில் வைக்கோலை பரப்பி நூதன முறையில் மணல் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து மணலுடன் சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு வேலூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சரக்கு ஆட்டோவின் உரிமையாளர் மற்றும் தப்பியோடிய டிரைவர் யார்? என்பது குறித்து விசாரித்து வருவதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.


Next Story