கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவிரியில் தமிழகத்திற்கு உரிமை கிடைக்காது வைகோ பேட்டி


கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவிரியில் தமிழகத்திற்கு உரிமை கிடைக்காது வைகோ பேட்டி
x
தினத்தந்தி 22 May 2018 4:15 AM IST (Updated: 22 May 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவிரியில் தமிழகத்திற்கு உரிய உரிமை ஒரு போதும் கிடைக்காது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

நெல்லை,

நரேந்திரமோடி பிரதமர் பதவிக்கு வந்த பிறகு இந்தியாவில் ஜனநாயகம் சீர்குலைய தொடங்கிவிட்டது. இந்த அரசு இந்துத்துவாவின் கொள்கையையும், செயல் திட்டங்களையும் செயல்படுத்துகின்ற அரசாக உள்ளது. கல்வியை பொதுப்பட்டியலில் சேர்த்தது நாட்டிற்கு மிகப்பெரிய கேடு. இதனால் தான் நீட் தேர்வை கொண்டு வந்து தமிழகத்திற்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

தற்போது குடிமை பணியில் கைவைக்கப்பட்டு உள்ளது. நேர்மையான, தொலை நோக்கு பார்வையுடன் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உருவாக்குகின்ற தேர்வு முறை உள்ளது. இந்த தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வந்து நாங்கள் பயிற்சி அளித்து அதில் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு பதவி என்றால் இது அவர்களுடைய கொள்கையை திணிக்க முயற்சி செய்கிறார்கள். இது நாட்டிற்கு ஆபத்து இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

பிரதமர் நரேந்திரமோடி, தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டே வருகிறார். இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி படுதோல்வியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படும். எல்லா தரப்பு மக்களும் மத்திய அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர். நரேந்திர மோடியின் அரசை கெடுப்பதே அந்த கட்சியின் தலைவர் அமித்ஷா தான்.

பெட்ரோல், டீசல் விலையை தினமும் உயர்த்தி வருவது நடுத்தர, வேலைக்கு செல்கின்ற மக்களை அதிக அளவில் பாதிக்கிறது. தினமும் பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்துவது வழிப்பறி கொள்ளை மாதிரி நடக்கிறது. இதற்கு மக்கள் தான் முடிவு கட்டவேண்டும்.

கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவிரியில் தமிழகத்திற்கு உரிய உரிமையும், நீதியும் கிடைக்காது. தமிழகத்திற்கு உரிய உரிமையை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்த நேரத்தில் மத்திய அரசு நமக்கு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் வழங்கிய உரிமையையும் பறித்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு ஓட்டலில் திருநெல்வேலி பைந்தமிழ் மன்றத்தின் சார்பில் சிலப்பதிகார விழா நடந்தது. மன்ற தலைவர் வைகோ தலைமை தாங்கினார். புரவலர் பத்ஹூர்ரப்பாணி முன்னிலை வகித்தார். செயலாளர் திவான் வரவேற்று பேசினார். பேராசிரியர் ஞானசம்பந்தன் சித்திர சிலம்பு என்ற தலைப்பில் பேசினார். விழாவில் செந்தமிழ் பூம்பொழில் வைகோவின் இலக்கிய உரை தொகுதி-3 நூல் வெளியிடப்பட்டது.

விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சதன்திருமலைகுமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நிஜாம், ராஜேந்திரன், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி, டாக்டர் ராமகிருஷ்ணன், பேராசிரியர் சத்தியமூர்த்தி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் காசி, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், எழுத்தாளர் மதுரா, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொருளாளர் குட்டி என்ற சண்முகசிதம்பரம் நன்றி கூறினார். 

Next Story