தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து நெல்லை மாவட்ட மீனவர்கள் போராட்டம் இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் புறக்கணிக்க முடிவு


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து நெல்லை மாவட்ட மீனவர்கள் போராட்டம் இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் புறக்கணிக்க முடிவு
x
தினத்தந்தி 23 May 2018 2:24 AM IST (Updated: 23 May 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து நேற்று நெல்லை மாவட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திசையன்விளை, 

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து நேற்று நெல்லை மாவட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று(புதன்கிழமை) முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் புறக்கணிக்க முடிவு செய்து உள்ளனர்.

மீனவ கிராமங்களில் பதற்றம்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நேற்று நடத்தப்பட்ட போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

போலீசாரின் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நேற்று நெல்லை மாவட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று நெல்லை மாவட்டத்திலுள்ள உவரி, இடிந்தகரை, கூத்தப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தங்குழி, பெருமணல், சோமையார்புரம், பம்மல் உள்ளிட்ட அனைத்து மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவியது. இங்குள்ள மீனவ குடும்பத்தினர் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் முன்பு திரண்டு துப்பாக்கி சூட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், மீனவ கிராம மக்கள் இன்று(புதன்கிழமை) முதல் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர். முதல்கட்டமாக இன்று முதல் இந்த மீனவ கிராமங்களை சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில்லை என முடிவு செய்தனர். அதன்படி, இந்த கிராமங்களில் கடலோரங்களில் நாட்டு படகுகள் வரிசையாக நிறுத்தப்பட்டன.

டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு

துப்பாக்கி சூட்டை கண்டித்து நேற்று இடிந்தகரையை சேர்ந்த பொதுமக்கள் கூட்டமாக கூடங்குளம் அருகே வயிராவி கிணறில் உள்ள டாஸ்மாக் கடைக்கு திரண்டு சென்றனர். அந்த கடையை அடித்து நொறுக்கி, தீவைத்து எரித்து விட்டு அனைவரும் இடிந்தகரைக்கு திரும்பி சென்றனர். அங்குள்ள கிறிஸ்தவ ஆலயம் முன்பு பொதுமக்கள் திரண்டு நள்ளிரவு வரை போலீசாருக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.

இதற்கிடையே இடிந்தகரை லூர்து அன்னை ஆலயத்தில் மணி அடிக்கப்பட்டது. அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஊர்வலமாக லூர்து அன்னை ஆலயத்துக்கு சென்றனர். ஆலயத்துக்கு முன்பு அனைவரும் அமர்ந்து தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கூடங்குளத்தை நோக்கி சென்ற 2 அரசு பஸ்கள் அந்த பகுதியில் வந்தன. அந்த பஸ்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர். அதில் ஒரு பஸ்சை கற்களை வீசி தாக்கி கண்ணாடிகளை சேதப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பஸ்களை மீட்டு, போக்குவரத்து கழக அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், மீனவ கிராமங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்ட மீனவ கிராமங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து இன்று முடிவு செய்து அறிவிக்க உள்ளதாக, மீனவ சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

பாதுகாப்பு வளையத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம்

மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவி வருகிறது. நேற்று கூடங்குளத்தில் உள்ள மீனவர்கள் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து கிறிஸ்தவ ஆலயம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மீனவர்கள் அணுமின் நிலையத்துக்கு திரண்டு சென்று போராட முடிவு செய்தனர். இதை அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 500–க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று கூடங்குளம் அணுமின் நிலையம் பகுதியில் குவிக்கப்பட்டனர். அணுமின் நிலையம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் போலீசார் துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story