தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் நாளை ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் நாளை ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 May 2018 10:45 PM GMT (Updated: 23 May 2018 7:11 PM GMT)

தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நாளை(வெள்ளிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

‘ஸ்டெர்லைட்’ ஆலை இயங்கி வருவதற்கு ஏற்கனவே பல மாதங்களாக பொதுமக்கள் வெளிப்படுத்திவரும் எதிர்ப்பின் தொடர்ச்சியாக, இப்போது கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஜனநாயக ரீதியில் அமைதியாகப் போராட்டம் நடத்தி வரும் மக்கள் பேரணி ஒன்றை நடத்தினர்.

அந்தப் பேரணி மீது அராஜகமாகவும் கண்மூடித்தனமாகவும், ஏ.கே.47 போன்ற துப்பாக்கிகளைக் கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தி இளம்பெண் ஒருவர் உள்ளிட்ட 12 பேரை கடுகளவும் மனித நேயமோ, பரிதாப உணர்வோ இல்லாமல், குருவிகளை சுட்டுக் கொல்வது போல் சுட்டு வீழ்த்தியிருக்கும் வெகுமக்கள் விரோத அ.தி.மு.க. அரசுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்தி வரும் மக்களை அழைத்துப் பேசி பிரச்சினைக்கு சுமுகமான முறையில் தீர்வு காண முன் வரவில்லை.

முன் கூட்டியே அறிவிக்கப்பட்டு நடைபெற்ற பேரணியில் சட்டம்-ஒழுங்கிற்கு பாதிப்பு வராமல் இருக்க அதற்கு தேவையான எண்ணிக்கையில் காவல்துறையினரை அங்கு நிறுத்தி முன்னெச்சரிக்கையாக எவ்வித தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

அங்குள்ள உயர் காவல்துறை அதிகாரிகளோ, மாவட்ட அதிகாரிகளோ போராட்டக்காரர்களை அழைத்துப் பேசி அமைதியான சூழலை உருவாக்கி ஒரு தீர்வு காணவும் எவ்விதத்திலும் முயற்சிக்கவில்லை.

ஐகோர்ட்டு மாவட்ட கலெக்டருக்கு அறிவுறுத்தியும், மக்களின் நியாயமான போராட்டத்திற்கு தீர்வு காண எந்த மட்டத்திலும் உள்ள அதிகாரிகளோ அல்லது தென் மாவட்டங்களில் உள்ள அமைச்சர்களோ முயற்சி செய்யவே இல்லை.

தொடர்ந்து போராடி வரும் மக்கள் மீது ஆணவத்தோடு பழிவாங்கும் எண்ணத்தில் மனிதாபிமானமற்ற தாக்குதல் நடத்தவே அ.தி.மு.க. அரசும், மாவட்ட அதிகாரிகளும், உயரதிகாரிகளும் காத்திருந்து, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இப்படியொரு கொடூரமான துப்பாக்கிச் சூட்டை திட்டமிட்டு நடத்தியிருக்கிறார்கள் என்றே அனைவரும் சந்தேகிக்கிறார்கள்.

எனவே அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தாலும் அரவணைப்பற்ற அராஜக அணுகுமுறையினாலும் நிகழ்ந்துள்ள இந்த விபரீதமான அரச பயங்கரவாதத் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக உடனே மூடக் கோரியும் 25-ந் தேதி(நாளை) அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தி.மு.க., காங்கிரஸ், திராவிடர் கழகம், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் சார்பில் ஜனநாயக ரீதியாக அறவழியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story