போலீஸ் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்–சாலை மறியல்


போலீஸ் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்–சாலை மறியல்
x
தினத்தந்தி 23 May 2018 9:00 PM GMT (Updated: 23 May 2018 7:22 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடைகளும் அடைக்கப்பட்டன.

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் கோவில்பட்டியில் வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக கோவில்பட்டி கோர்ட்டு வளாகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தாலுகா அலுவலகம், புதுரோடு, எட்டயபுரம் ரோடு வழியாக வந்து உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல் சங்கர் கணேஷ் தலைமை தாங்கினார். வக்கீல்கள் மோகன்தாஸ், விஜயபாஸ்கர், ரவிசங்கர், சிவா, ரெங்கராஜன், ஸ்ரீதர், பாரத்குமார், மணிகண்டராஜன் உள்பட 50–க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், இந்த சம்பவத்தை கண்டித்து இன்று (அதாவது நேற்று) முதல் ஒரு வாரம் கோர்ட்டு புறக்கணிப்பு செய்வதாக அறிவித்து விட்டு, கலைந்து சென்றனர்.

விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பிச்சையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. போலீசாரின் துப்பாக்கி சூட்டை கண்டித்தும், இதில் பலியானவர்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் எட்டயபுரம் பஸ்நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் நல்லையா தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் சேது உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தீப்பெட்டி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் பாலமுருகன், மாமன்னர் பூலித்தேவன் மக்கள் இயக்க தலைவர் செல்லத்துரை, ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ராஜசேகர், 5–வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் உள்ளிட்ட 16 பேர் கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லாபாய் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தார்.

தூத்துக்குடியில் நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கோவில்பட்டியில் 100 பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும், 800 கையினால் செய்யக்கூடிய தீப்பெட்டி தொழிற்சாலைகளும் நேற்று இயங்கவில்லை. சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் நேற்று ரூ.8 கோடி மதிப்புள்ள தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டதாக நே‌ஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவம், செயலாளர் சேதுரத்தினம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கடையடைப்பு

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று கோவில்பட்டியில் பெட்டிக்கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதேபோல் கயத்தாறு, விளாத்திகுளம், காயல்பட்டினம், ஆத்தூர், முக்காணி, பழைய காயல், திருச்செந்தூர், ஏரல் பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. எட்டயபுரத்துக்கு நேற்று பஸ்கள் சரிவர இயக்கப்படாததால், பஸ்நிலையம் வெறிச்சோடி கிடந்தது.

கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையம் முன்பு நேற்று மதியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் மல்லிகா தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 26 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

சாலை மறியல்

இதேபோல் ஏரல் அருகே சிவகளை பஸ்நிறுத்தம் அருகில் சாலைமறியல் நடந்தது. வக்கீல் ராம்குமார், அரிமுருகன், வேல்சாமி, சிவகளை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கணபதி ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். சப்–இன்ஸ்பெக்டர் சரவணன் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தென்திருப்பேரையில் நகர தி.மு.க செயலாளர் ராமஜெயம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் செல்வம் உள்பட 50–க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை ஆழ்வார்திருநகரி போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

லாரி மீது கல்வீச்சு

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, எம்.சவேரியர்புரம், ஸ்பிக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று 2–வது நாளாக கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அங்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.

பழையகாயலில் இருந்து உப்பு ஏற்றி கொண்டு ஆந்திரா நோக்கி லாரி ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. புல்வாவெளி அருகே சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் அந்த லாரியின் கண்ணாடி மீது கல் வீசி தாக்கினர். இதில் லாரி கண்ணாடி உடைந்தது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


Next Story