கர்நாடகத்தில் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ்–ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் எடியூரப்பா தாக்கு
கர்நாடகத்தில் சந்தர்ப்பவாத கூட்டணியை காங்கிரஸ்–ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் அமைத்துள்ளதாக எடியூரப்பா தாக்கி பேசினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் சந்தர்ப்பவாத கூட்டணியை காங்கிரஸ்–ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் அமைத்துள்ளதாக எடியூரப்பா தாக்கி பேசினார்.
பா.ஜனதா போராட்டம்கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி 104 இடங்களில் வென்றதை தொடர்ந்து அக்கட்சி சார்பில் எடியூரப்பா முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். இருப்பினும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததை அறிந்த எடியூரப்பா தனது முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, காங்கிரஸ்–ஜனதாதளம்(எஸ்) கூட்டணி சார்பில் ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி நேற்று கர்நாடக புதிய முதல்–மந்திரியாக பொறுப்பு ஏற்று கொண்டார்.
முன்னதாக, காங்கிரஸ்–ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி பொறுப்பில் அமர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் பா.ஜனதாவினர் கையில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் தீர்ப்புக்கு எதிரான தினம் என்ற பெயரில் நடந்த இந்த போராட்டத்தில் முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா, ஷோபா எம்.பி., ஆர்.அசோக் எம்.எல்.ஏ. உள்பட பா.ஜனதா தலைவர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின்போது எடியூரப்பா பேசும்போது கூறியதாவது:–
சந்தர்ப்பவாத கூட்டணிகர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சியை புறக்கணித்துள்ளனர். ஜனதாதளம்(எஸ்) கட்சியை கணக்கில் கூட அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. பிரதமர் நரேந்திர மோடி கூறிய காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாக கர்நாடக மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணி ஆட்சி 3 மாதங்கள் கூட நிலைக்காது. மாநிலத்தில் இப்போது ஆட்சி கலைக்கப்பட்டாலும் கூட இனி வரும் தேர்தலில் 130 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும்.
முதல்–மந்திரியாக இருந்த சித்தராமையாவை காங்கிரஸ் மேலிடம் மறந்துவிட்டது. சித்தராமையாவை, சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் அவமதித்து விட்டனர். தேர்தலுக்கு முன்பாக தேவேகவுடா கூறும்போது ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்காதபட்சத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது இல்லை என்று கூறினார். தற்போது தேவேகவுடா, தான் கூறியதை மறந்து செயல்பட்டுள்ளார்.
விவசாய கடன் தள்ளுபடிஆட்சிக்கு வந்தவுடன் ரூ.54 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக ஜனதாதளம்(எஸ்) கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியது. ஆனால், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு பெரும்பான்மையான இடங்கள் கிடைக்கவில்லை எனக்கூறி விவசாய கடனை எப்படி தள்ளுபடி செய்ய முடியும்? என்று அக்கட்சி கூறுகிறது. இதன்மூலம், ஆட்சி அமைக்க பெரும்பான்மை இடங்கள் கிடைக்காது என்று தெரிந்தே குமாரசாமி பொய்யான வாக்குறுதிகளை அளித்தாரா? என்ற கேள்வி எழுகிறது. தேர்தல் அறிக்கையில் கூறியபடி விவசாய கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் பா.ஜனதா சார்பில் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்.
கர்நாடகத்தில் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ்–ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் கைகோர்த்துள்ளனர். வருகிற தேர்தலில் காங்கிரஸ்–ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு வாக்காளர்கள் தக்கபாடம் கற்று கொடுப்பார்கள். நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.