144 தடை உத்தரவை மீறியதாக மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு
144 தடை உத்தரவை மீறி தூத்துக்குடிக்கு வந்ததாக மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மீது தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தூத்துக்குடி,
144 தடை உத்தரவை மீறி தூத்துக்குடிக்கு வந்ததாக மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மீது தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
அரசியல் கட்சி தலைவர்கள்தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு வந்தார்.
அதேபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெகலான் பாகவி உள்ளிட்டோரும் தங்களுடைய ஆதரவாளர்களுடன் வந்தனர்.
வழக்குப்பதிவுதூத்துக்குடி பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய ஆதரவாளர்கள் அதிகமானோருடன் தூத்துக்குடிக்கு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், வைகோ, பாலகிருஷ்ணன், முத்தரசன், டி.ராஜேந்தர், தெகலான் பாகவி ஆகியோர் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது தடையை மீறி வந்து வன்முறையை உருவாக்க முயன்றதாக கூறி 153 ஏ, 143, 188 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இதேபோல் நேற்று முன்தினம் 144 தடையை மீறி ஆதரவாளர்களுடன் வந்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.