28–ந்தேதி தேர்தல் நடக்கும் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் 144 தடை உத்தரவு மதுபானம் விற்பனை செய்யவும் அனுமதி மறுப்பு


28–ந்தேதி தேர்தல் நடக்கும் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் 144 தடை உத்தரவு மதுபானம் விற்பனை செய்யவும் அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 24 May 2018 9:45 PM GMT (Updated: 2018-05-25T03:14:18+05:30)

ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் 28–ந்தேதி நடக்கும் தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு, 

ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் 28–ந்தேதி நடக்கும் தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் மதுபானம் விற்பனை செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

சட்டசபை தேர்தல்

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த 12–ந் தேதி தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், சுமார் 10 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டைகள் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அந்த தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், வருகிற 28–ந் தேதி ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 31–ந் தேதி எண்ணப்படுகின்றன. இதனால், ஓட்டுப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை அமைதியாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

144 தடை உத்தரவு

அதன்படி, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி தேர்தலையொட்டி, யஷ்வந்தபுரம், ஆர்.எம்.சி. யார்டு, ராஜகோபால் நகர், பீனியா, நந்தினி லே–அவுட், மகாலட்சுமி லே–அவுட், ஜாலஹள்ளி, கங்கம்மனகுடி, ராஜராஜேஸ்வரி நகர், காமாட்சிபாளையா, ஞானபாரதி, பேடராயனபுரா, அன்னபூர்னேஸ்வரி நகர், கிரிநகர் ஆகிய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேப் போல் மதுபானம் விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டு உள்ளது.

நாளை(சனிக்கிழமை) மாலை 5 மணி முதல் 28–ந் தேதி நள்ளிரவு 12 மணி வரையும், 31–ந் தேதி காலை 6 மணி முதல் 31–ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுபானம் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. இதே காலக்கட்டத்தில் தான் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் 144 தடை உத்தரவும் அமலில் இருக்கும்.

மேற்கண்ட தகவல் பெங்களூரு மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுனில் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story