கச்சநத்தம் கிராம மோதலில் பலியான 3 பேருக்கு திருமாவளவன் சீமான், பாரதிராஜா இறுதி அஞ்சலி
கச்சநத்தம் கிராம மோதலில் பலியான 3 பேருக்கு திருமாவளவன் சீமான், பாரதிராஜா இறுதி அஞ்சலி உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
மதுரை,
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் மருது என்ற சண்முகநாதன், ஆறுமுகம், சந்திரசேகர் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இவர்களின் உடல்கள், மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. உடல்களை வாங்க மறுத்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் கடந்த 3 நாள்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு, குடும்பத்தினருக்கு அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர். கிராம மக்களின் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் கச்சநத்தம் கிராம மக்களின் கோரிக்கைகள் பலவற்றை அரசு ஏற்றுக்கொண்டது. மேலும் இழப்பீடு தொகையும் ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் இறந்தவர்களின் உடல்களை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.
பின்னர் பெரிய ஆஸ்பத்திரியில் இருந்த 3 சடலங்களுக்கும் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செய்யப்பட்டது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன், தமிழக மக்கள் விடுதலை கழக நிறுவனர் முருகவேல்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து 3 பேரின் சடலங்களும் தனித்தனியாக வாகனங்களில் ஏற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கச்சநத்தம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.