தமிழகத்தில் முதல்-அமைச்சர் நாற்காலிக்கு ஸ்டாலினுக்கு நிகராக யாரும் இல்லை- வைகோ பேச்சு
தமிழகத்தில், முதல்- அமைச்சர் நாற்காலிக்கு ஸ்டாலினுக்கு நிகராக யாரும் இல்லை என்று வைகோ கூறினார்.
திருவாரூர்
திருவாரூரில் நடந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.
கருணாநிதி உடல்நிலை சரியில்லா விட்டாலும் நிச்சயம் அவர் உடல்நலம் பெற்று இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து தி.மு.க.வுக்கு மட்டும் அல்லாமல் தமிழகத்துக்கு அரிய சேவைகள் செய்ய வேண்டும். இங்கு பேராசிரியர் அன்பழகன் கலந்து கொண்டு இருப்பது கருணாநிதியே இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளது போல் உள்ளது.
கருணாநிதி, ஒரு பன்முக தன்மை கொண்ட படைப்பாளி. திருவாரூர் அருகே உள்ள திருக்குவளையில் பிறந்து இன்று தேசிய தலைவராக உயர்ந்தவர். அரசியல் திருப்பங்களை எல்லாம் சாதனையாக மாற்றி சரித்திரம் படைத்தவர். அவரின் பணிகளை பார்க்கும்போது நமக்கே ஆச்சர்யமாக உள்ளது. பல்கலைக்கழகத்துக்கு சென்று படித்து பட்டம் பெற்றவர் அல்ல அவர். பல பல்கலைக்கழங்கள் இன்று அவரை பற்றி படிக்கும் நிலை உள்ளது. ஒரு சமானிய சமூகத்தில் பிறந்து சரித்திரத்தை படைத்த தலைவராக உயர்ந்தவர்.
13 முறை எம்.எல்.ஏ.வாகிய அவர், தான் போட்டியிட்ட எந்த தேர்தலிலும் தோல்வியின்றி வெற்றி முரசு கொட்டியவர். ஆட்சியை திறம்பட நடத்தியவர். தலைசிறந்த நிர்வாகி, எழுத்தாளர், படைப்பாளி, பேச்சாளர், போராளி என்ற எத்தனையோ தடங்களில் அவரை பாராட்ட முடியும். இதற்கு அடித்தளமாக இருந்தது அவருடைய உழைப்பு. அதுதான் இந்த சாதனையை படைக்க வைத்தது. உழைப்பால் உச்சத்தை தொட்டவர் கருணாநிதி.
ஆட்சியில் இருக்க வேண்டும், அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று மட்டுமே குறிக்கோளாக கொண்டவர் அல்ல கருணாநிதி. எல்லோரிடமும் மனிதநேய பண்போடு திகழ்ந்தார். அதிகாரம் வரும், போகும். ஆட்சி வரும், போகும். கருணாநிதி 5 முறை முதல்-அமைச்சராக இருந்தார் என்பதற்காக பாராட்டுகிறோம் என்பது அல்ல. அதையும் தாண்டி பல சாதனைகளை செய்தார். மாநில சுயாட்சியை போராடி பெற வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தவர். மாநில உரிமைக்கு குரல் கொடுத்தவர் . பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தவர்.
இன்று இந்தியா காவி மயம் ஆகிக்கொண்டு இருக்கிறது. நிச்சயமாக நான் சொல்கிறேன். காவி இல்லாத இந்தியாவை உருவாக்க நாம் களம் காணுவோம். இந்தியாவை காவி மயமாக்குகிற மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுகிற முயற்சியில் நாம் இணைந்து செயல்படுவோம். எடுபிடி அரசு தமிழகத்தில் செயல்படுகிறது. தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்றார்கள். அதேபோல மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் எரிவாயு போராட்டம் வரும்போது துப்பாக்கியை ஆட்சியாளர்கள் நீட்ட மாட்டார்கள் என்பது என்ன உத்தரவாதம்?.
எனவே இந்த ஆட்சிக்கு முடிவு கட்டாவிட்டால் இந்த பகுதி ரசாயன மண்டலம் ஆகிவிடும். எனவே மு.க.ஸ்டாலின் தொடங்கிய இந்த எழுச்சி பயணத்திற்கு நாம் கரம் கோர்த்து செயல் படுவோம். தமிழகத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது. தமிழகத்தை சாதிய சக்திகள் ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது. எனவே காவி இல்லாத இந்தியா, சாதி இல்லாத தமிழகத்தை உருவாக்க, ஸ்டாலின் தலைமையில் எல்லோரும் இணைந்து பணியாற்றுவோம்.
கருணாநிதி தி.மு.க.வை கட்டிக்காத்து வளர்த்தார். அவருடைய அரசியல் ஆக்கம், முடிவுகள், அடக்கு முறைகளை எதிர்த்தது. தமிழ் இலக்கியத்தில் தொல்காப்பியனும், வள்ளுவனும் தந்ததைப்போல காலத்தால் அழியாத காவியத்தை தந்து இருக்கிறார். வாழ்நாள் முழுவதும் எத்தனையோ சோதனைகள் வந்தாலும் சிரித்துக்கொண்டே சிந்தையில் ஏற்றுக்கொண்டவர். 29 ஆண்டுகாலம் கருணாநிதியின் நிழலில் இருந்தவன் நான். செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பக்கபலமாக என்றைக்கும் இருப்பேன்.
13 பேரை நரபலி போல வேட்டையாடியது தமிழக அரசு. இந்த அரசின் கரங்கள் ரத்தம் படிந்த கரங்கள். இதனை நடத்துவது எடப்பாடி அரசு. அவரை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.கூடாரம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் 120 முதல் 145 இடங்களுக்கு மேல் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற முடியாது.
அதற்கு கருணாநிதியைபோல ஸ்டாலின், காய்களை நகர்த்துவார். பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் ஸ்டாலின் தலைமை தாங்குகிற அணி தான் ஜெயிக்கும். இந்திய அரசு யார் கையில் என்பதை தீர்மானிக்கும் வகையில் தென்னகத்தின் பிரதிநிதியாக ஸ்டாலின் அங்கு இருப்பார்.
எடப்பாடி அரசு சட்டத்தை ஏவுகிறது. துப்பாக்கியை நீட்டுகிறது. திராவிட இயக்கத்தை ஒழித்து விடலாம் என பகல் கனவு காண்கிறார்கள். அது நடக்காது. திராவிட இயக்கத்தை அழிக்க நினைக்கிற அனைவருக்கும் கூறுகிறேன். எந்த அடக்கு முறைக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். சூழ்ச்சி வலைகளை கிழித்து எறிவோம். திராவிட இயக்கத்தை காப்போம். பெரியார், அண்ணா லட்சியங்களை காப்போம்.
தமிழகத்தை சூழ்ந்து வரும் ஆபத்துகளை தூக்கி எறிவோம். தமிழகத்தில் முதல்-அமைச்சர் நாற்காலிக்கு ஸ்டாலினுக்கு நிகராக எவரும் இல்லை. ஆட்சி பீடத்தில் அவர் அமர்வார். அதை கண்டு நாங்கள் மகிழ்வோம். திராவிட இயக்கம் ஆயிரங்காலத்து பயிராக இருக்கும். கருணாநிதி 100 ஆண்டுகாலம் கடந்து 120 ஆண்டு காலம் வாழ்வார். அன்றும் அவரை வாழ்த்தும் அகவையை பேராசிரியருக்கு கொடுக்கட்டும்.
கருணாநிதியின் புகழை, வார்த்தைகளால் யார் பேசினாலும் அதிலே முழுமை பெற்றோம் என்று மகிழ்ச்சி அடைய முடியாது. அவ்வளவு பெருமைகளுக்கு சொந்தக்காரர் கருணாநிதி. இந்தியாவின் வரலாற்றில் சட்டசபை தேர்தல்கள் 1952-ல் தொடங்கி 15 சட்டமன்ற தேர்தல் நடந்தது. 52 தேர்தலில் தி.மு.க போட்டியிடவில்லை. 84 தேர்தலில் கருணாநிதி போட்டியிடவில்லை. மற்ற 13 தேர்தல்களிலும் தோல்வியே காணாத தலைவர் கருணாநிதி. இந்தியாவில் எந்த தலைவருக்கும் இந்த பெருமை இல்லை. அப்படிப்பட்ட புகழுக்கு சொந்தக்காரர். தோன்றிய துறை தோறும் புகழ்கொடி நாட்டியவர். அவருக்கு தெரியாத துறையே கிடையாது.
கருணாநிதி சட்டசபையாக இருந்தாலும் சரி, மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி புகழ்கொடி நாட்டியவர். 40 ஆண்டு காலத்தில் கருணாநிதி பேச்சு, எழுத்திலும் யாரும் குறைகண்டதில்லை. அதனால் தான் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் இதயத்தில் வீற்றிருக்கிறார். அவரை பார்த்தால், பேசினால் புது தெம்பு ஏற்படும். அவர் தமிழுக்காக ஆற்றிய அரும்பணிகள், அவர் சொன்ன சுயமரியாதை கருத்துகள் ஏராளம்.
கருணாநிதி ஒரு அதிசய மனிதர். அவரைப்போன்று இன்னொருவர் இனி பிறக்க முடியாது. கருணாநிதி எழுதாமல் இருக்கலாம். பேசாமல் இருக்கலாம். அவரை மிஞ்சும் தலைவர் இன்று எவரும் கிடையாது. அவர் அரசியல் ஞானி. நான் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டவன். அ.தி. மு.க.வால் வளர்க்கப்பட்டவன். இந்தியாவில் கருத்து வேறுபாடு உள்ள தலைவர்கள் கூட வணங்கும் தலைவர் கருணாநிதி. ஸ்டாலின் தி.மு.க. செயல் தலைவர் என்றாலும் தி.மு.க.வுக்கு தலைவர் அவர் தான். சட்டசபையில் பெரும்பான்மை இல்லாமல் 111 உறுப்பினர்களோடு எடப்பாடி அரசு உள்ளது. சட்டசபையில் தி.மு.க. பங்குபெற வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நீங்களும், தி.மு.க. உறுப்பினர்களும் சட்டசபையில் குரல் கொடுக்க வேண்டும். கலந்து கொள்ள வேண்டும். அதற்கான முடிவை நீங்கள் எடுக்க வேண்டும்.
மத்தியில் உள்ள மதவாத அரசு தூக்கி எறியப்பட வேண்டும். பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த மோடி அரசு அகற்றப்பட வேண்டும். இது ஏழைகளுக்கான அரசு அல்ல. கோடீஸ்வரர்களுக்கான அரசு. தமிழகத்தில் உள்ள அரசு பா.ஜ.க. பினாமி அரசு. ஊழல் அரசு. இப்படிப்பட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தூக்கி எறியப்பட வேண்டும். தமிழகம் மற்றும் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம், காட்சி மாற்றத்துக்கு கதாநாயகனாக ஸ்டாலின் திகழ வேண்டும். மத்தியில் நடைபெறும் ஆட்சி, காட்சி மாற்றத்துக்கு கதாநாயகனாக ராகுல்காந்தி திகழ வேண்டும். அதற்கு நாம் உறுதுணையாக இருப்போம்.
தஞ்சை மாவட்டம் மீது கருணாநிதிக்கு தனி பற்று உண்டு. இந்த மண்ணின் மீது அதிக பற்று கொண்டவர். முதன்முதலாக காவிரி பிரச்சினையை ஆரம்பித்தவர் அவர் தான். நடுவர் மன்றம் வேண்டும் என்று கேட்டவரும் அவர்தான். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியவரும் அவர் தான். நடுவர் மன்றத்தில் இடைக்கால தீர்ப்பு கேட்டவரும் அவர் தான். இறுதித்தீர்ப்பு வாங்கியவரும் அவர்தான். ஒரு துரும்பை எடுத்து போடாதவர்கள் கூட நான் செய்தேன், நான் செய்தேன் என்கிறார்கள். காவிரி பிரச்சினை கருணாநிதி வாழ்வோடு, ரத்தத்தோடு கலந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமையுங்கள் என்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தினோம்.
நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்தும் இன்றுவரை அமைக்கப்படவில்லை. ஆனால் இப்போது சற்று முன்பு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது என்று செய்தி வந்துள்ளது. கருணாநிதி பிறந்த நாள் விழாவில் இந்த செய்தி வந்திருக்கிறது. இது மகத்தான செய்தி. மு.க.ஸ்டாலினை, இங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் எல்லோரும், இந்த அணியை தலைமை தாங்கி நடத்த வேண்டும். தமிழகத்துக்கு வழிகாட்ட வேண்டும் என்று கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது.
கருணாநிதியிடம் உள்ள சுறுசுறுப்பை ஒட்டு மொத்தமாக வாங்கி வந்தவர் தான் ஸ்டாலின். உழைப்பு, உழைப்பு அது தான் ஸ்டாலின். 24 மணி நேரமும் கட்சியைபற்றி நினைப்பவர் கருணாநிதி. ஸ்டாலினும் அதற்கு ஒருமேல் கூடுதலாக ஒருமணிநேரம் இருந்தாலும் அதிலும் கட்சியை பற்றி நினைத்துக்கொண்டு இருப்பார். நாங்கள் நாளைக்கே சட்டசபைக்கு சென்று பேசத் தயார். ஆனால் அது குறித்து ஸ்டாலின் தான் முடிவு செய்தார்.
திராவிடத்தை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. பெரியார் மண் என்ற இந்த மண்ணுக்கு சிறப்பு என்றால் பெரியார், அண்ணா, திராவிட இயக்கத்தால் தளபதி போன்றவர்களால், முன்பைவிட தற்போது தேவை, ஆபத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
அது போல இன்னொரு ஆபத்து குருகுலக்கல்வி. இதையெல்லாம் போக்க வேண்டுமானால் இப்போது மத்தியில் இருக்கிற மோடி ஆட்சி, அந்த காவி ஆட்சியை அகற்றியாக வேண்டும். இந்த விழாவில் இருந்து திரும்பி போகும் வேளையில் அந்த உறுதியோடு நீங்கள் செல்ல வேண்டும்.
காட்சியாக இருக்கிற ஆட்சியை வெளியே அனுப்ப வேண்டும். மத்தியில் காவி ஆட்சி. இங்கு ஆவி ஆட்சி. இந்த ஆட்சிகள் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு சூளுரை ஏற்க வேண்டிய நாள் கருணாநிதி பிறந்த நாள் விழா. சட்டசபையில் சிறப்பாக பணியாற்றக்கூடிய இயக்கம் தி.மு.க. நீங்கள் நாளை முதல் சட்டசபைக்கு செல்ல வேண்டும். அவர்கள் வேண்டுமானால் தூக்கி போடட்டும். அதைப்பற்றி கவலைப்படக்கூடாது. தமிழக ஆட்சி தான் வெளியே தூக்கி எறியப்பட வேண்டும். அப்போது தான் திராவிடம் சமூக விடுதலை பெற முடியும். தெளிவான போராட்ட களத்துக்கு செல்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story