தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு சின்னம்: துப்பாக்கி சூடு குறித்த முழுமையான அறிக்கை 2 வாரங்களில் வெளியிடப்படும்


தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு சின்னம்: துப்பாக்கி சூடு குறித்த முழுமையான அறிக்கை 2 வாரங்களில் வெளியிடப்படும்
x
தினத்தந்தி 3 Jun 2018 9:30 PM GMT (Updated: 3 Jun 2018 7:45 PM GMT)

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த முழுமையான அறிக்கை 2 வாரங்களின் வெளியிடப்படும் என்று மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த முழுமையான அறிக்கை 2 வாரங்களின் வெளியிடப்படும் என்று மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைப்புக்குழு

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து ‘மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு‘ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த குழுவில் மும்பை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோல்சே பட்டேல், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் ஆகியோர் தலைமையில் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், காவல்துறை தலைமை இயக்குனர்கள், மூத்த வக்கீல்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளனர்.

அவர்கள் தூத்துக்குடியில் கடந்த 22–ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி, அத்துமீறல்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வாக்குமூலம் பெறப்பட்டன.

இடைக்கால அறிக்கை

இந்த நிலையில் மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று இடைக்கால அறிக்கை தயார் செய்யப்பட்டது. அந்த அறிக்கை குறித்து நேற்று மாலையில் மும்பை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோல்சே பட்டேல், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், மதுரை மக்கள் கண்காணிப்பக இயக்குனர் ஹென்றிடிபென் ஆகியோர் நிருபர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் கூறிஇருப்பதாவது;–

144 தடை உத்தரவு

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் போராடும் மக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இது ஒரு சூழ்ச்சியாக தெரிகிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிடுவதற்கு பதிலாக கவன ஈர்ப்பு போராட்டத்துக்கு அனுமதி கொடுத்தது, ஏற்கனவே வந்த லட்சக்கணக்கான மக்களை கணக்கில் எடுத்து கொள்ளாததை காட்டுகிறது. இது நிர்வாகத்தின் தெளிவற்ற தன்மையை காட்டுகிறது. 100 நாட்களாக போராடும் மக்களை கலெக்டர் சந்திக்காதது சந்தேகத்தை எழுப்புகிறது. மக்களை தமிழக அமைச்சர்களோ, மத்திய மந்திரிகளோ சந்திக்கவில்லை.

144 தடை உத்தரவு காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் மட்டும் எதிர்பார்க்கப்படும் வன்முறை, ஆபத்து ஆகிய காரணங்களுக்காக விதிக்கப்பட வேண்டும். அதன்படி 2018–ம் ஆண்டு மே 18–ந் தேதி தரப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் சூழ்நிலையை அறிவதற்காக 9 வருவாய்த்துறை அலுவலர்கள் நிர்வாக நடுவர்களாக நியமிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு தாசில்தார் கூட நியமிக்கப்படவில்லை. துப்பாக்கி சூடன்று மாவட்ட கலெக்டர், துணை கலெக்டர், தாசில்தார் ஆகியோர் தூத்துக்குடியில் இல்லை. அதேபோல் 144 தடை உத்தரவு மக்களிடம் முறையாக சென்றடையவில்லை. 144 தடை உத்தரவு போடப்பட்டத்தில் எந்த விதிமுறையும் கடைபிடிக்கப்படவில்லை.

மே 23–ந் தேதி தூத்துக்குடியில் அதிக அளவில் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். இது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியது. அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளும் உறவினர்களும் போலீசாரால் தாக்கப்பட்டனர். அண்ணாநகர் பகுதியில் போலீசார், வீடுகளில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி மக்களை அடித்து, இளைஞர்களை கைது செய்தனர். காவல்துறையின் கொடூரமான தாக்குதலால் பலர் மாற்றுத்திறனாளியாக மாற்றப்பட்டனர். மேலும் உளவியல் நோயாளியாக பலர் உருவாக்கப்பட்டனர்.

நினைவு சின்னம்

எனவே ஸ்டெர்லைட் கட்டிடங்கள் தகர்க்கப்பட்டு ஆலை இருந்த இடம் வெறுமையாக்கப்பட வேண்டும். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்காக நினைவு சின்னம் அமைக்கப்பட வேண்டும். துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் நடந்த சட்டத்திற்கு புறம்பான தொடர் தேடலுக்கும், கைதுகளுக்கு, துன்புறுத்தல்களுக்கும் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையின் அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

இன்னும் 2 வாரங்களில் இந்த குழு துப்பாக்கி சூடு குறித்து முழுமையான அறிக்கையை வெளியிடும்.

இவ்வாறு அந்த இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.


Next Story