பெண்ணாடம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் தந்தை–மகன் கைது


பெண்ணாடம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் தந்தை–மகன் கைது
x
தினத்தந்தி 4 Jun 2018 3:15 AM IST (Updated: 4 Jun 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் தந்தை–மகன் கைது செய்யப்பட்டனர்.

பெண்ணாடம்,

பெண்ணாடம் அடுத்த துறையூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராசு என்பவரது குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 30–ந்தேதி கிருஷ்ணமூர்த்தியின் மகள் கிருஷ்ணவேணியும், கோவிந்தராசுவின் மருமகள் கோகிலாவும் பேசிக் கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த கிருஷ்ணமூர்த்தி, கோகிலாவை ஏன் எனது மகளிடம் பேசுகிறாய் என கேட்டு கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கோவிந்தராசு, அவரது மனைவி ஜானகி, மகன் ராஜா ஆகியோர் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தி திட்டி, தாக்கினர். இதில் காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி விருத்தாசலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராசு, ராஜா, ஜானகி ஆகியோரை தேடிவந்தனர். இதற்கிடையே போலீசார் விசாரணையில், கோவிந்தராசு, ராஜா ஆகியோர் தாக்கியதில் தான் கிருஷ்ணமூர்த்தி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கோவிந்தராசு, ராஜா ஆகியோர் பெண்ணாடம் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் பினுகுட்டன் என்பவர் முன்பு சரண் அடைந்தனர். அவர்களை கிராம நிர்வாக அலுவலர் பெண்ணாடம் போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story