பருவ மழையின் காரணமாக ஏற்படும் மின்விபத்துகளை தடுக்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - அதிகாரி வேண்டுகோள்


பருவ மழையின் காரணமாக ஏற்படும் மின்விபத்துகளை தடுக்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - அதிகாரி வேண்டுகோள்
x
தினத்தந்தி 4 Jun 2018 4:15 AM IST (Updated: 4 Jun 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

பருவ மழையின் காரணமாக ஏற்படும் மின்விபத்துகளை தடுக்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

திருவண்ணாமலை,

தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் மின் விபத்துகள் ஏற்படாத வகையில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நாகராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மழையின்போது மின்விபத்துகளை தவிர்க்க எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

அறுந்து தரையில் விழுந்து கிடக்கும் மின் கம்பிகள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை பொது மக்கள் தொடக்கூடாது. மின்சாதன பொருட்களில் தன்னிசையாக செயல்படாமல் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இடி அல்லது மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.

திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்க வேண்டாம். ஈரமான கைகளுடன் சுவிட்சுகள் மற்றும் பிளக்குகள் போன்றவற்றை இயக்கக் கூடாது. மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது. மழை காலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வுப் பெட்டிகள் ஆகியவற்றின் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும்.

மின் கம்பத்தின் மீது கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். குளியலறையிலும், கழிப்பறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்த கூடாது. மின்சாரத்தினால் ஏற்பட்ட தீயினை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க கூடாது. அவசர நேரங்களில் மின் இணைப்பினை விரைந்து துண்டிக்கும் வகையில் பொதுமக்கள் விழிப்புணர்வோடும், மிகுந்த முன் எச்சரிக்கையுடனும் செயல்பட்டு மின் விபத்துகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story