கர்நாடகத்தில் நடிகர் ரஜினிகாந்த் படத்தை திரையிட தடை விதித்திருப்பது தவறான செயல் நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் கருத்து
காவிரி விவகாரத்திற்கும் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
பெங்களூரு,
காவிரி விவகாரத்திற்கும் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட தடை விதித்திருப்பது தவறான செயல் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் கருத்து பதிவு செய்து உள்ளார்.
கர்நாடகத்தில் ‘காலா’ படத்துக்கு தடைநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘காலா’ என்கிற ‘கரிகாலன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகிற 7–ந்தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து இருப்பதாக கூறி கன்னட அமைப்புகள் கர்நாடகத்தில் ‘காலா’ படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி பெங்களூரு, மண்டியா உள்ளிட்ட இடங்களில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அத்துடன் கர்நாடகத்தில் ‘காலா’ படத்தை திரையிடக் கூடாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கும் கன்னட அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இதைதொடர்ந்து கர்நாடகத்தில் ‘காலா’ படத்தை திரையிட தடை செய்து கர்நாடக வர்த்தக சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தில் ‘காலா’ திரைப்படம் வெளியாகுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்–மந்திரி குமாரசாமி கூறும்போது, கர்நாடக மக்களும், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் ‘காலா’ படம் வெளியாவதை விரும்பவில்லை. இதுபற்றி நான் ஆலோசித்து முடிவு செய்வேன் என்று கூறியிருந்தார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்துஇந்த நிலையில் இந்த விவகாரம் பற்றி நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:–
மனிதனுக்கும், ஆறுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் தான் காவிரி விவகாரம் குறித்து பேசுகையில் நாம் மிகவும் உணர்ச்சிவச பட்டுவிடுகிறோம். காவிரி நதிநீர் பங்கீடு குறித்து பேசும் போது எல்லாம், கர்நாடகம்–தமிழ்நாடு ஆகிய இரு மாநில மக்களின் உணர்வுகளும் இப்படி தான் இருக்கும். உணர்ச்சிவசப்படுவது மட்டுமே ஒரு பிரச்சினைக்கு தீர்வாகாது. காவிரி விவகாரம் குறித்த நடைமுறையில் நாம் சிந்திக்க வேண்டும். இந்த விவகாரத்தில் இரு மாநில அரசுகளும், மத்திய அரசும் வல்லுனர் குழுவினருடன் இணைந்து பேசி விவசாயிகளின் பிரச்சினைகளை புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த சூழலில் ‘காலா’ திரைப்படத்தை வெளியிடவிடாமல் தடுத்து நாம் என்ன செய்யப்போகிறோம்?. நடிகர் ரஜினிகாந்த் காவிரி விவகாரத்தில் கூறிய கருத்து கன்னட மக்களை வெகுவாக பாதித்துள்ளது. இதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறிக்கொண்டு, ‘காலா’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சில அமைப்பினர் கூறி வருகின்றனர். ஆனால், கர்நாடகத்தில் ‘காலா’ படம் திரையிட தடை வித்தித்திருப்பது பெரும்பாலான மக்களின் விருப்பத்துக்கு எதிரானது.
தடை விதித்தது தவறான செயல்காவிரி விவகாரத்திற்கும், ‘காலா‘ படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒரு குறிப்பிட்ட சிலர் கர்நாடகத்தில் எந்த படத்தை திரையிடலாம் அல்லது எந்த படத்தை திரையிடக்கூடாது என முடிவு செய்வது தவறான செயலாகும். இந்த முடிவு படத்தை தயாரித்தவர் அல்லது அந்த படத்தில் நடித்திருப்பவர்களை மட்டுமே பாதிக்கும். தவிர அதை கடந்து வேறு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எனவே ஒருசில அரசியல் காரணங்களுக்காக திரைப்படத்துரையினரின் வருமானத்தை நாம் இழக்கச்செய்யலாமா?.
எனவே ‘காலா’ படத்தை கன்னட மக்களிடம் விட்டுவிடுவோம், அந்த திரைப்படத்தை பார்ப்பதா? வேண்டாமா? என்பதை அவர்கள் முடிவு செய்துகொள்ளட்டும். இந்த விவகாரத்தில் இதுவே எனது கருத்து.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.