மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கு: பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமியின் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அருப்புக்கோட்டை,
மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கொடுத்த தகவலின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் முருகன் (வயது 42), கருப்பசாமி (39) ஆகியோரை கைது செய்தனர். தற்போது 3 பேரும் மதுரை மத்திய சிறையில் உள்ளனர்.
முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று அமர்வு நீதிபதி முத்துசாரதா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இவர்களை ஜாமீனில் விடுதலை செய்தால் விசாரணை பாதிக்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இவர்களின் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனிடையே பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் மனு ஏற்கனவே 3 முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நிர்மலாதேவியின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நேற்று 4–வது முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வருகிறது.