திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களை பாகுபாடின்றி நடத்த வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களை பாகுபாடின்றி நடத்த வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 Jun 2018 4:45 AM IST (Updated: 6 Jun 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களை பாகுபாடின்றி நடத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

ராஜபாளையத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.கல்யாணசுந்தரம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.250, ரூ.150, ரூ.100 என சிறப்பு கட்டண தரிசன முறை அமலில் உள்ளது. இந்த கட்டண டிக்கெட் வாங்கும் பக்தர்கள் சாமியை அருகில் நின்று தரிசனம் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும். கோவிலுக்கு சம்பந்தமே இல்லாத பலர் கோவில் முன்பகுதியில் இருந்து கொண்டு, பக்தர்களை சாமி அருகில் நின்று தரிசிக்க வைப்பதாக கூறி டிக்கெட் வாங்காமல் கோவிலுக்குள் அழைத்துச் செல்கின்றனர்.

அதே நேரத்தில் அவர்களிடம் டிக்கெட்டுக்கு உரிய கட்டணத்தை வசூலித்துக்கொள்கின்றனர். இப்பணத்தை கோவில் நிர்வாகத்திடம் செலுத்துவதில்லை. இவ்வாறு கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. எனவே திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தை முறைப்படுத்த தனி குழு அமைக்கவும், கோவிலுக்கு சம்பந்தம் இல்லாத அர்ச்சகர்கள், பக்தர்களிடம் பணம் வசூலிக்க தடை விதித்தும், கோவில் பணியாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கவும், கோவிலில் அறநிலையத்துறை ஊழியர்கள் வருகை பதிவுக்கு பயோ மெட்ரிக் கருவியை பொருத்தவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை, நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

திருச்செந்தூர் கோவிலில் சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர்களால் மட்டுமே பூஜைகள் செய்யப்படுகின்றன என்பதை இந்து சமய அறநிலையத்துறை கமி‌ஷனர், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் உறுதிப்படுத்த வேண்டும். பக்தர்களை ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி ஒரே விதமாக நடத்த வேண்டும். கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் வருகைக்காக பயோமெட்ரிக் பதிவு கருவியை பொருத்த வேண்டும்.

பக்தர்களிடம் சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் பணம் பறிக்கும் செயலில் அர்ச்சகர்கள் ஈடுபடக்கூடாது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை கமி‌ஷனர், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் வாரத்திற்கு ஒருமுறை திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சட்டபூர்வமாக நியமிக்கப்படாத அர்ச்சகர்கள் குறித்த விழிப்புணர்வு பலகைகள் கோவிலில் வைக்கப்பட வேண்டும். பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை வசதி, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். இவற்றை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்.

இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்து இந்து சமய அறநிலையத்துறை கமி‌ஷனர், கோவில் செயல் அதிகாரி ஆகியோர் வருகிற ஜூலை மாதம் 5–ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Next Story