தஞ்சையில் கல்லால் அடித்து தொழிலாளி கொலை ஜாமீனில் வந்தவர் கைது


தஞ்சையில் கல்லால் அடித்து தொழிலாளி கொலை ஜாமீனில் வந்தவர் கைது
x
தினத்தந்தி 7 Jun 2018 4:30 AM IST (Updated: 7 Jun 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

அரசு குடியிருப்பில் தங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை ஜாமீனில் வந்தவர், கல்லால் அடித்து கொலை செய்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மானம்புச்சாவடி மிஷன் மேட்டு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 70). கூலித்தொழிலாளியான இவர், இரவு நேரத்தில் வீட்டில் தூங்காமல் அதே பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பழைய குடியிருப்பில் உள்ள வீட்டில் தூங்குவது வழக்கம்.

வழக்கம்போல் சுப்பிரமணியன் நேற்று முன்தினம் இரவு தூங்குவதற்காக சென்றார். நேற்று காலையில் குடியிருப்பு வளாகத்தில் தலை, கால்களில் ரத்த காயங்களுடன் சுப்பிரமணியன் பிணமாக கிடந்தார். அருகில் 2 செங்கற்கள் ரத்தக் கறையுடன் கிடந்தன. இதைப் பார்த்த சிலர், இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், யாரோ ஒருவர் சுப்பிரமணியனை செங்கற்களால் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது உடல் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இந்த கொலை தொடர்பாக தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்று விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளியை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், தஞ்சை ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சுப்பிரமணியனை நான்தான் கொலை செய்தேன் என்று தொழிலாளி ஒருவர், தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஜமீன்நல்லமங்களம் கிராமம் வேதக்கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார்(40) என்பதும், சுப்பிரமணியனை செங்கற் களால் அடித்து ராஜ்குமார் கொலை செய்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

கடந்த 2009-ம் ஆண்டு தஞ்சையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவர், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதால் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

ராஜ்குமார் மீது தஞ்சை கிழக்கு, தெற்கு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகளும் உள்ளன. இவர், கடந்த சில ஆண்டுகளாக தஞ்சை மானம்புச்சாவடி ரெசிடன்சி பங்களா தெருவில் வசித்து வந்தார். இவரது சகோதரர்களும் இதே பகுதியில் வசித்து வருகின்றனர். இதனால் அடிக்கடி தஞ்சைக்கு ராஜ்குமார் வந்து செல்வதுண்டு. அப்படி வரும்போது பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பழைய குடியிருப்பில் தான் இரவில் இவர் தங்குவார்.

ராஜ்குமார், தன் மீதான வழிப்பறி வழக்கு ஒன்றில் நேற்றுமுன்தினம் தஞ்சை ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் ஆனார். பின்னர் அவர் இரவில் தங்குவதற்காக பழைய குடியிருப்புக்கு சென்றார். அப்போது ஏற்கனவே அங்கு தங்கியிருந்த சுப்பிர மணியனுடன் அவருக்கு தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றியதில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், சுப்பிரமணியனை கீழே தள்ளியதுடன் அருகில் கிடந்த செங்கற்களை எடுத்து தலையிலும், காலிலும் அடித்தார். இதில் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story