தலைமை ஆசிரியர் தாக்கியதை கண்டித்து மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்


தலைமை ஆசிரியர் தாக்கியதை கண்டித்து மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2018 3:30 AM IST (Updated: 9 Jun 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம் அருகே தலைமை ஆசிரியர் தாக்கியதை கண்டித்து மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநத்தம்,

ராமநத்தம் அருகே தொழுதூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் தொழுதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 500–க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு கடந்த ஆண்டு தொழில்முறை கல்வி பிரிவில் பிளஸ்–1 படித்த மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தொழில்முறை கல்வி பிரிவில் தற்போது பிளஸ்–2 படிக்கும் மாணவர்களுக்கும் இந்த கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நேற்று இதுபற்றி தலைமை ஆசிரியர் ராஜேந்திரனிடம் கேட்டுள்ளனர்.

அப்போது தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா, ஆசிரியர் கண்ணன் ஆகியோர் சேர்ந்து மாணவர்களை ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து பெற்றோருடன் சேர்ந்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை கண்டித்து பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள், தங்களை தாக்கிய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், ஆசிரியர்கள் தாக்கியது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story